2001, ஜனவரி, 01 – அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2002 – இல் பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
2007 – நவம்பர், 23 – அன்று, மீண்டம் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக அரியலூர் உருவாக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
வழிபாட்டுத்தலங்கள்
திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோவில், கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில், கங்கைகொண்டசோழபுரத்தில் சிவன் கோவில், குருவாலப்பர் கோவில் போன்றவை சில மிக முக்கிய இந்துக்கோயில்கள் ஆகும்.
இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் சிவன் கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), சற்றேறக்குறைய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் ஒரு சிறு வடிவமாகும்.
வீரமாமுனிவர் என அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மிஷனரி காண்ஸ்டாண்டினோ ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்ட அடைக்கல மாதா ஆலயம், அரியலூரிலிருந்து 32 கி.மீ தொலைவில் ஏலாக்குறிச்சியில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
முதலாம் ராஜேந்திர சோழன் தனது வட இந்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை நிர்மாணித்தார்.
திருமழப்பாடியில் 750 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவே, தமிழகத்தில் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்டுள்ள உலோகத்தாலான மிகப்பெரிய சிலை ஆகும்.
தமிழகத்தில் மிக அதிக சிமெண்ட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாவட்டமாகும்.
ஜெயங்கொண்டத்தில் டைனோசர்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கனிமங்கள் மற்றும் சுரங்கம்
அரியலூர், கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். சுண்ணாம்புக்கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன.
சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன.
சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை , சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது.
தீ களிமண், தரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், தீ செங்கற்கள் உற்பத்திக்காகவும் மற்றும் இரசாயனத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும்.
மேற்கூறிய முக்கிய கனிமங்கள் தவிர, செம்மண், செங்கல் களிமண் போன்ற சிறுபான்மை அளவு கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.