அளவை ஆகுபெயர்கள்



எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலிய அளவைப் பெயர்கள், அந்த அளவைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி ஆகுபெயர்களாக வரும்.

1. எண்ணல் அளவையாகு பெயர்

ஒன்று, இரண்டு, மூன்று போன்ற எண்ணல் அளவையின் பெயர்கள் அந்த எண்ணிக்கையைக் குறிக்காமல் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும்.

எ.கா: ஆலும் வேலும் பல்லுக்குறுதி

     நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இதில் நாலும் இரண்டும் என்னும் எண்ணல் அளவையின் பெயர்கள், எண்ணிக்கையைக் குறிக்காமல் நாலடியாரையும் திருக்குறளையும் குறிக்கின்றது.

2. எடுத்தல் அளவையாகு பெயர்

கிலோ, கிராம் போன்ற எடுத்தல் அளவையின் பெயர்கள் அந்த அளவைக் குறிக்காமல் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.

எ.கா: இரண்டு கிலோ வாங்கி வா

இதில் கிலோ என்னும் எடுத்தல் அளவையின் பெயர், அந்த அளவிலுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளமையால் எடுத்தல் அளவையாகு பெயர் ஆகும்.

3. முகத்தல் அளவையாகு பெயர்  

லிட்டர், மில்லி லிட்டர் போன்ற முகத்தல் அளவைகள் அந்த அளவையைக் குறிக்காமல், அந்த அளவுடைய பொருளுக்கு ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.

எ.கா இரண்டு லிட்டர் கொடு

இதில் லிட்டர் என்னும் முகத்தல் அளவை, அந்த அளவுடைய பொருளைக் குறிக்கின்றது.

4. நீட்டல் அளவையாகு பெயர்

மீட்டர், கிலோ மீட்டர், முழம் போன்ற நீட்டல் அளவுகள், அந்த அளவையைக் குறிக்காமல், அந்த அளவுடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர் எனப்படும்.

எ.கா: நான்கு முழம் கொடு

இங்கு முழம் என்னும் அளவு, அந்த அளவுடைய பொருளுடைய குறிக்கின்றது.