இந்தோனேசியா (Indonesia), அதிகாரபூர்வமாக இந்தோனேசியக் குடியரசு (Republic of Indonesia) என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும்.
33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இதனால் உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது.
இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு.
சக்கார்த்தா இந்த நாட்டின் தலைநகரம்.
பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன.
சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன.
உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது.
இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தோனேசியத் தீவுகள், குறிப்பாக சாவகம் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது.
முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது.
இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர்.
இதனால், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் செழித்திருந்தன.
மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது.
இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின.
கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலுக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப்பகுதியில் அறிமுகப்படுத்தின.
இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலனித்துவப் பிரதேசமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த இந்தோனேசியா, 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது.
1949 ஆம் ஆண்டு, ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா, அங்கீகரிக்கப்பட்டது.
1953 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அவை இந்தோனேசியாவை அங்கீகரித்தது.
2004, டிசம்பர், 26 – அன்று, இந்தோனேசியாவின், சுமத்திரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல தெற்காசிய நாடுகளை சுனாமி தாக்கியது, இதனால் கணக்கிலடங்காத பொருட்சேதமும், சுமார், 2,00,000 க்கும் மேற்பட்ட மக்களும் மடிந்தனர்.
சுமத்ரா தீவிலுள்ள டோபா ஏரியானது உலகின் மிகப்பெரிய மறுமலர்ச்சிபெற்ற எரிமலை வாயாகும் (Caldera).
உலகிலேயே அதிக அளவு எரிமலைகலைக் கொண்ட நாடு ஆகும்.
மொராபி எரிமலை இந்தாட்டில் உள்ளது.