- உயிரீற்றுப் புணர்ச்சி(உயிர்முன் உயிர் புணர்ச்சி)
நிலைமொழி ஈற்றில் உயிர் நிற்க, வருமொழி முதலில் உயிர் வந்து புணரும்போது, அவற்றை இணைக்க இடையில் ஒரு மெய்யெழுத்து வரும். அஃது உடம்படுமெய் எனப்படும்.
உடம்படுமெய் நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள உயிர் எழுத்துகளை உடம்படுத்த(சேர்க்க) வரும் மெய்.
- நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ என்னும் உயிர் எழுத்துகள் நிற்க, அவற்றின் முன் உயிர் வந்து புணரும் போது, ‘ய்’ என்னும் எழுத்து உடம்படுமெய்யாய் வரும்.
- இ,ஈ,ஐ தவிர்த்த ஏனைய உயிர்முன் உயிர் வந்து புணரும்போது, ‘வ்’ என்னும் எழுத்து உடம்படுமெய்யாய் வரும்.
- ஏ என்னும் எழுத்தின் முன் உயிர்ந்து புணரும்போது, ‘ய்’ அல்லது ‘வ்’ என்னும் எழுத்து உடம்படுமெய்யாய் வரும்.
விதி :
“இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்” நன்னூல்-162
- இகர ஈறு
எ.கா : சேறி+ஆயின் – சேறியாயின்
‘இஈ ஐவழி யவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ற்+இ-றி) வருமொழி முதல் உயிரையும்(ஆ), உடம்படுத்த யகர உடம்படுமெய்(ய்) தோன்றி, ‘சேறி+ய்+ஆயின்- சேறியாயின்’ என ஆனது.
- ஈகார ஈறு
எ.கா : நீ+அதை – நீயதை
‘இஈ ஐவழி யவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ந்+ஈ-நீ) வருமொழி முதல் உயிரையும்(அ), உடம்படுத்த யகர உடம்படுமெய்(ய்) தோன்றி, ‘நீ+ய்+அதை- நீயதை’ என ஆனது.
- ஐகார ஈறு
எ.கா : நாவை+அசைத்த – நாவையசைத்த
‘இஈ ஐவழி யவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(வ்+ஐ-வை) வருமொழி முதல் உயிரையும்(அ), உடம்படுத்த யகர உடம்படுமெய்(ய்) தோன்றி, ‘நாவை+ய்+அசைத்த- நாவையசைத்த’ என ஆனது.
- அகர ஈறு
எ.கா : பல+என்று – பலவென்று
‘ஏனை உயிர்வழி வவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ல்+அ-ல) வருமொழி முதல் உயிரையும்(எ), உடம்படுத்த வகர உடம்படுமெய்(வ்) தோன்றி, ‘பல+வ்+என்று – பலவென்று’ என ஆனது.
- ஆகார ஈறு
எ.கா : நிலா+ஒளி – நிலாவொளி
‘ஏனை உயிர்வழி வவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ல்+ஆ-லா) வருமொழி முதல் உயிரையும்(ஒ), உடம்படுத்த வகர உடம்படுமெய்(வ்) தோன்றி, ‘நிலா+வ்+ஒளி- நிலாவொளி’ என ஆனது.
- ஏகார ஈறு
எ.கா : ஒன்றே+என்னின் – ஒன்றேயென்னின்
‘ஏமுன் இவ் விருமையும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ற்+ஏறே) வருமொழி முதல் உயிரையும்(எ), உடம்படுத்த யகர உடம்படுமெய் தோன்றி ‘ஒன்றே+ய்+என்னின்- ஒன்றேயென்னின்’ என்றானது.
எ.கா : ஒன்றே+என்னின் – ஒன்றேவென்னின்
‘ஏமுன் இவ் விருமையும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ற்+ஏறே) வருமொழி முதல் உயிரையும்(எ), உடம்படுத்த வகர உடம்படுமெய் தோன்றி ‘ஒன்றே+வ்+என்னின்- ஒன்றேவென்னின்’ என்றானது.
புணர்ச்சி விதிகள்
நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துகளாயிருப்பின் புணர்ச்சியின்கண் அவ்விரு சொற்களும் விட்டிசைக்கும், உடம்படாத அவ்விரு சொற்களும் சேர்ந்திசைக்க வேண்டுமாயின் அவற்றை உடம்படுத்தற் பொருட்டு யகரமும், வகரமும் உடம்படு மெய்களாக வரும்.
இகர, ஈகார, ஐகார ஈற்றுச் சொல்முன் யகரமும் ஏனைய உயிர்கள் முன் வகரமும், ஏகாரத்தின் முன் யகரமும் வகரமும் ஆகிய இரண்டும் உடம்படுமெய்களாக வரும்.
எ.கா-1 சேறி + ஆயின்
- இகர ஈறு சேறி(ற்+இ) + ஆயின்
- யகர உடம்படுமெய் சேறி(ய்+ஆ=யா) யின் = சேறியாயின்
எ.கா-2 நீ + அதை
- ஈகார ஈறு நீ(ந்+ஈ) + அதை
- யகர உடம்படுமெய் நீ(ய்+அ=ய)தை = நீயதை
எ.கா-3 நாவை + அசைத்த
- ஐகார ஈறு நாவை(வ்+ஐ) + அசைத்த
- யகர உடம்படுமெய் நாவை(ய்+அ)சைத்த = நாவையசைத்த
எ.கா-4 பல + என்று
- அகர ஈறு பல(ல்+அ) + என்று
- வகர உடம்படுமெய் பல(வ்+எ)ன்று = பலவென்று
எ.கா-5 நிலா + ஒளி
- ஆகார ஈறு நிலா(ல்+ஆ) + ஒளி
- வகர உடம்படுமெய் நிலா(வ்+ஒ)ளி = நிலாவொளி
எ.கா-6 ஒன்றே + என்னின்
- ஏகார ஈறு ஒன்றே(ற்+ஏ)+என்னின்
- யகர உடம்படுமெய் ஒன்றே(ய்+எ)ன்னின் = என்றேயென்னின்
- வகர உடம்படுமெய் ஒன்றே(வ்+எ)ன்னின் = என்றேவென்னின்
விதி :
“இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்” நன்னூல்-162
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து