ஒருநாள் காமராஜரை பார்க்க வந்தவர் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி. தன் இல்லத் திருமணத்திற்கு வரவேண்டுமென்று கேட்டு அழைப்பிதழோடு வந்திருந்தார். அவரை அழைத்து அமரச் செய்து நலங்கேட்டார்.

அதே நேரத்தில் அவருடைய வசதியற்ற வாழ்க்கை நிலையை அவரது சொற்கள் மூலமாக புரிந்து கொண்டார்.

 தனது உதவியாளரை அழைத்துக் கேட்பது போலக் கேட்டு அந்த திருமணனாளில் தனக்கு வேறு அலுவல் இருப்பதாகக் கூறி விழா சிறப்பாக அமையத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அனுப்பிவிட்டார்.

வந்தவர் மனம் மிக வருந்தி விடைப்பெற்றார். ஆனால் அவருடைய உள்ளத்தில் ”ஹீம்… காமராஜ் இன்று பெரிய தலைவராகி விட்டார்.

அந்தக் காலத்தில்  நாமும் அவரோடு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தோம். ஆனால் இன்று மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ஏற்பட்டுவிட்ட நிலையில் ஏழையான தன் வீட்டுக்கு வருவதற்கு அவரது அந்தஸ்த்த இடம் தருமா?” என்றெல்லாம் எண்ணியவண்ணம் ஊர் போய் சேர்ந்தார்.

விழா நாளும் வந்தது. அந்த சிற்றூரில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையான விழாவை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அந்த வீதியில் பரபரப்பு, ஆரவார ஒலி கேட்டு அந்த தியாகி வெளியே வந்தார்.

அவர் கண்களையே நம்ப முடியவில்லை. வந்து நின்ற காரிலிருந்து காமராஜ் இறங்கினார். புன்னகை பூத்தமுகத்தோடு தியாகியின் கைகளைப் பற்றினார்.

 தியாகிக்கோ கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அவரைத் தட்டிக் கொடுத்த வண்ணம், ”வா, விழா மேடைக்குப் போவோம்” என்று கூறிய வண்ணம் மண்டபத்தின் உள்ளே சென்றார்.

மணமக்களை ஆசீர்வதித்தார். அவரைச் சரியான ஆசனத்தில் கூட அமர்த்த முடியவில்லையே என்று அந்தத் தியாகி ஏக்கத்தோடு செயலற்று நின்றார்.

அப்போது காமராஜ் பேசினார். ”நீ அழைப்பிதழ் கொடுத்த அன்றைக்கே நான் வர்றதுக்கு முடிவு செஞ்சிட்டேன்.

ஆனா நான் அப்பவே வர்றதாச் சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றார்ன்னு சொல்லி கடமை வாங்கித் தடபுடலா பண்ணியிருப்ப, உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விரும்பல. இப்ப வந்துட்டேன், உனக்கு திருப்தி தானே” என்றார். கூடியிருந்த கூட்டத்தை பெருமிதத்தோடு பார்த்தார் அந்த தியாகி.

   ”சரி… வரட்டுமா… மேல் கொண்டு காரியத்தை கவனி” என்று சொல்லி விட்டு விடை பெற்றார் காமராஜ்.

    நட்பில் பழைமை என்ற ஒரு அதிகாரத்தையே எழுதிய வள்ளுவரின் வைர வரிகளுக்கு ஓரிலக்கியமாகத் திகழ்ந்தவர் காமராஜ்.