முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்து கொள்ளும் படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவே த்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.

அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், “கண்ணா! சாப்பிடு.” என்று கூறினான். கண்ணன் அசை யவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து,
அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.

தயிரை சாதத்தில் கலக்கி, உப்பு மாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. “சாப்பிடு கண்ணா!” என்று கெஞ்சினான். சாதம் அப்படியே இருந்தது.
“என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு!” என்று சொல்லிக் கெஞ்சி அழுதான்.

குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியா த கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தையும் உண்டான்.
குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்ய த்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது.

“சாதம் எங்கே?” என்று கேட்டார். குழந்தையும், “கண்ணன் சாப்பிட்டு விட்டான்” என்று சொன்னான். நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, “நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டு விட்டு, கண்ணன் சாப்பிட்டதாக சொல்கிறான்” என்று சொன்னார்.
நம்பூதிரி “நைவேத்தியத்தை என்ன செய்தாய்” என்று கேட்டார். குழந்தை, “கண்ணன் நேரிலே யே வந்து சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான்.

அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்க ள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள்.

நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், “தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா?..”

” உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?” என்று அடித்தார்.

குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை. குழந் தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை.

நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கிய போது, “நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்.” என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.
நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, “என் மகனுக் குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!” என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.