குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் பொருளாதி ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்றாகும்.

இது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது. குறிப்பினால் தான் உணர்த்தும்.  

எ.கா:

பொன்னன்   – பொருள்

ஆரூரன்     – இடம்

ஆதிரையான் – காலம்

கண்ணன்    – சினை

கரியன்      – குணம்

நடையன்    – தொழில்         

“அவன் பொன்னன்”

இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னுடையவன் என்று பொருள் தருவதால் பொன் என்னும் பொருளின் அடிப்படையில் தோன்றி அதனை பெற்றிருக்கும் கருத்தாவை உணர்த்துகிறது. இச்சொல் காலத்தை வெளிப்படையாக உணர்த்தவில்லை.

 “பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்

வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே”     -நன்னூல் 321