கோதாவரி (Godavari) இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும்.
இது கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 கி.மீ. ஆகும்.
கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும்.
இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது.
திரிம்பாக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது.
கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது.
வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர்.
இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.
புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது.
தென்னிந்தியாவின் மிக நீளமான நதி கோதாவரி ஆகும்.
1873 – ஆம் ஆண்டு, கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு, கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையை சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் கட்டினார்.