வரலாறு சுருக்கம்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உள்ளது. ‘வாத்தியார் கோயில்’ என்ற பெயரிலும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது.

சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் கருப்பணசாமி சிலைகள் உள்ளன.

விழா காலங்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்த கோயில் வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் உள்ளது.

தல வரலாறு:

செம்பிநாடு முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் பெண் வழி வாரிசு பூவலத்தேவன்குமராயி தம்பதிக்கு 1787ல் முத்துவடுகநாதர் பிறந்தார். பூவலத்தேவன் திடீரென இறந்ததையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற எதிரிகள், அவரது வாரிசான முத்து வடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்.

இதனை அறிந்த குமராயி முத்து வடுகநாதருடன் நாட்டை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியேறினார். பின்னர் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறியதால் பட்டூர் வாத்தியார் என்ற பெயரிலும் முத்துவடுகநாதர் அழைக்கப்பட்டார்.

அப்போது அருகில் உள்ள சிங்கம்புணரியில் ஒரு கொள்ளை கும்பல் மாந்திரீக வேலை செய்து அப்பகுதி மக்களிடம் கொள்ளையடித்தது. மக்களின் வேண்டுகோளை ஏற்று சிங்கம்புணரி வந்த முத்துவடுகநாதர், அங்கு தனது சித்து வேலைகளால் கொள்ளையர்களை விரட்டியடித்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதி முழுவதும் அவரது புகழ் பரவியதுடன், திரளான பக்தர்கள் கூட்டமும் உருவானது. தொடர்ந்து அவர் தன்னை நாடி வந்த பக்தர்களின் துன்பங்களை தீர்த்து வைத்தார்.

96 ஆண்டுகள் வாழ்ந்த முத்து வடுகநாதர் 1883ல் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். அவருக்கு வணிகர் சங்கம் சார்பில் சிங்கம்புணரி வேங்கைப்பட்டியில் சிறிய பீடம் அமைத்து, அதில் அவரது சிலை நிறுவப்பட்டது.

பின்னர் 1993ல் இந்த கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பவுர்ணமி தினத்தன்று இரவிலும், அமாவாசை தினத்தன்று பகலிலும் சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன.

சித்ரா பவுர்ணமி அன்று வணிகர் சங்கம் சார்பில் பிரமாண்டமான பால்குட விழா நடக்கிறது. ஊர் எல்லையில் உள்ள சீரணி அரங்கிலிருந்து கிளம்பும் பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைவர்.

அன்றிரவில் சித்தர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடி 18ம் பெருக்கு தினத்தன்று 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும்.

சித்தரின் ஆசி பெறுவதற்காக இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சித்தர் ஜீவ சமாதியான ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அன்றைய தினம் முத்து வடுகநாதர் பக்தர் உருவில் வருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அன்று கோயில் பூசாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இங்கு சித்தரை வழிபட்டு மனமுருகி திருநீறு பூசி வேண்டினால் நோய் குணமடைவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்றும், மனச் சங்கடங்கள் அனைத்தையும் முத்து வடுகநாதர் தீர்த்து வைப்பார் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.