சிந்து ஆறு என்பது தெற்காசியாவில் தெற்கே பாய்ந்து செல்லும் ஒரு பெரிய ஆறு, இது சிந்து அல்லது அபாசியின் என்றும் அழைக்கப்படுகிறது.

பாரதியின் சிந்து நதி மீதினிலே என்ற பாடலால் சிந்து நதி என்று பரவலாக அறியப்படுகிறது.

இந்த ஆற்றின் மொத்த நீளம் 3,610 கிமீ (1,988 மைல்) ஆகும், இது ஆசியாவின் நீண்ட ஆறுகளில் ஒன்றாகவும், பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகவும் உள்ளது.

இவ்வாறு இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றும் இந்த ஆறு, லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர், மற்றும் பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வழியாகவும் பின் பஞ்சாப்பில் பாய்ந்து சென்று இறுதியில் சிந்து பகுதியின் தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது.

இது பாகிஸ்தானின் மிக நீண்ட ஆறு மற்றும் தேசிய நதி ஆகும்.

இந்த ஆற்றின் மொத்த நீர் வடிகால் பகுதி 1,165,000 km2 (450,000 sq mi) ஆகும்.

இதன் மதிப்பிடப்பட்ட வருடாந்தர வெள்ள ஓட்டம் சுமார் 243 km^3 (58 cu mi), இது நைல் நதியின் ஆண்டு வெள்ளத்தில் இருமடங்காகவும், டைகிரிஸ் மற்றும் யூபிரிடிஸ் ஆறுகள் ஆகியவற்றின் நீரில் மூன்று பங்கு கூடுதலாகவும் உள்ளது.

இதில் ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் உலகில் இருபத்தோராவது பெரிய ஆறாக உள்ளது.

ஜாதகர் என்பது லடாக்கில் அதன் இடது கிளை ஆறு ஆகும்.

சமவெளிப்பகுதிகளில், அதன் இடது கிளைதான் செனாப் ஆறு ஆகும், அவற்றில் நான்கு முக்கிய துணை நதிகள் உள்ளன அவை, ஜீலம், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகும். சிந்து ஆற்றின் வலது துணை ஆறுகளில் முதன்மையானவை ஷிக் ஆறு, கில்கிட் ஆறு, காபூல் ஆறு, கோமல் ஆறு, குராம் ஆறு ஆகியவை ஆகும்.

இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் ஆறுகள் கொண்ட மலையுச்சியிலிருந்து துவங்கி, இந்த ஆறு காடுகள், சமவெளிகள், வறண்ட கிராமப்புறங்களில் சூழல் மண்டலத்தை வளப்படுத்துகிறது.

சப்த சிந்து என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட இன்றைய பாகிஸ்தானின் சிந்து வடிநிலத்தை சிந்து ஆறு உருவாக்குகிறது மற்றும் ஈரானின் செயிண்ட் அவெத்தா ஹிப்தா சிந்து (இரண்டு சொற்களின் பொருளும் “ஏழு ஆறுகள்”) என அழைத்தது.

சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு.

சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்).