சிறுநீரகங்கள் (kidneys) என்பவை முதுகெலும்பிகளின் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும்.

இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன.

முதிருயிரிகளில் இது 11 செமீ நீளம் கொண்டுள்ளது. இவை குருதியை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள்வழியாகப் பெறுகின்றன; இவற்றில் இருந்து குருதி ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது.

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது.

மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன.

வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) அமைந்துள்ளது. கல்லீரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.

சிறுநீரகத்தின் செயலாற்றும் பகுதி நெப்ரான் ஆகும்.

இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் சிறுநீரகத்தால் நீக்கப்படுகிறது.

சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் வாஸோபிரஸ்ஸின் ஆகும்.

தாவரவியல்


மனித உடல் பாகங்கள்