1863, ஜனவரி, 12 – அன்று இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) அவர்கள் கொல்கத்தாவில் பிறந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.

இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).

இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.

இவர், ‘ஶ்ரீராமகிருஷ்ண மடம்’ மற்றும் ‘ஶ்ரீ ராமகிருஷ்ண மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவினார்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருண்டு கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார்.

இவரது, ஆணித்தனமான பேச்சும், முத்துப்போன்ற வார்த்தைகளும் பிரமாதமான பேச்சுத் திறனும் இந்திய மக்களிடையே உறங்கிக்கொண்டிருந்த தேசிய உணர்வை தூண்டியது.

இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

1897, மே, 1 அன்று, இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரால், சுவாமி விவேகானந்தரால் ஏற்படுத்தப்பட்டது.

1902, ஜூலை, 4 – அன்று இயற்கை எய்தினார்.

இந்தியனாக இருப்பதில் பெருமைகொள் எனக் கூறியவர்.

1984 – ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி, 12 – ஆம் தேதியை இந்திய அரசு, தேசிய இளைஞர்கள் தினமாக அறிவித்தது.