தேவையான பொருட்கள்

  1. பசுஞ்சாணம் – 5 கிலோ
  2. பசுவின் கோமையம் – 5 லிட்டர்
  3. பசும்பால் – 2 லிட்டர்
  4. தயிர் – 2 லிட்டர்
  5. நெய் – 1 லிட்டர்
  6. கரும்புச்சாறு – 3 லிட்டர்
  7. இளநீர் – 3 லிட்டர்
  8. வெல்லம் – 2 கிலோ

தயாரிக்கும் முறை

பசுஞ்சாணி ஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு லிட்டர் கலந்து, பிளாஸ்டிக் வாளியில் நான்கு நாட்கள் வைத்து தினம் காலை, மாலை இரு முறை இதைப் பிசைந்துவிட வேண்டும்.

ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு நன்கு கரைத்து, கம்பி வலை அல்லது நைலான் கொசுவலையை கொண்டு மூடி நிழலில் வைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இருமுறை வீதம், காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன்படுத்தி, வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த முறையில் முப்பது நாட்களில் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.

பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்கர் பயிர்களுக்கு 3.5 லிட்டரும், மரங்களுக்கு 4.7 லிட்டரும் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும். பஞ்சகாவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகாவ்யா) கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

பஞ்சகாவ்யாவில் பயிருக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் உள்ளது.

பஞ்சகாவ்யாவில் கரும்புச்சாறு, வெல்லம் ஆகியவை ஒரு பாகமாக சேர்ப்பதால் அது அமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும் நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ் ஆகியவையும் பஞ்சகாவ்யாவில் அதிகம் காணப்படுகின்றன.

லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங்கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய் எதிர்ப்புப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

இப்பொருட்கள் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் திறன் பெற்றதோடு உயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல்படுகிறது.

இது தாவரங்களுக்கு அதிகப்படியான வளர்ச்சியையும், மகசூலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயிர்களையும், மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாதுகாத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பூச்சி கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் செயல்படுகிறது.