பண்புப்பெயர் புணர்ச்சிபொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள் பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம், குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும். பண்புப் பெயர் ‘மை’ விகுதி பெற்று வரும்.

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நன்மை என்பனவும் இவற்றுக்கு எதிர்ச்சொற்களும் புணரும்பொழுது சில மாற்றங்களடைந்து புணரும்.

விதி :

 ‘ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்

ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்

தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்

இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே’ -நன்னூல் 136

  1. ஈறு போதல்

எ.கா: கடுமை+நடை – கடுநடை

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, ‘மை’ விகுதி கெட்டு கடு+நடை – கடுநடை என்றானது.

2. இடையுகரம் இய்யாதல்

எ.கா: சிறுமை+அன் – சிறியன்

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டு, ‘சிறு+அன்’ என நின்றது. பின் ‘இடைஉகரம் இய்யாதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றிலுள்ள உகரம் (ற்+உ–று) ‘இ’ ஆகி, (ற்+இ–றி) ‘சிறி+அன்’ என்றானது. பின், ‘இஈ ஐவழி யவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும் (றி–ற்+இ), வருமொழி முதல் உயிரையும்(அ) உடம்படுத்த யகர உடம்படுமெய் பெற்றுச் ‘சிறி+ய்+அன் – சிறிய்அன்’ என ஆனது. பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(ய்), வருமொழி முதல் உயிரும்(அ) புணர்ந்து( ய்+அ – ய) ‘சிறியன்’ எனப் புணர்ந்து நின்றது.

3. ஆதி நீடல்(ஆதி-முதல்)

எ.கா: செம்மை+அடி – சேவடி

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டுச் ‘செம்+அடி’ என்றானது. பின், ‘ஆதி நீடல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி முதல் ‘செ’, ‘சே’ என நீண்டு ‘சேம்+அடி’ என்றானது. பின், ‘இனையவும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மகரம் கெட்டு ‘சே+அடி’ என்றானது. பின், ‘ஏனை உயிர்வழி வவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்      (சே– ச்+ஏ) வருமொழி முதல் உயிரையும் இணைக்க வகர உடம்படுமெய் பெற்று ‘சே+வ்+அடி–சேவ்+அடி’ என்றானது. பின் ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(வ்) வருமொழி முதல் உயிரும் புணர்ந்து (வ்+அ – வ) ‘சேவடி’ என்றானது.

4. அடியகரம் ஐயாதல்

எ.கா: பசுமை+நிணம் பைந்நிணம்

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, ‘மை’ விகுதி கெட்டுப் ‘பசு+நிணம்’ என்றானது. பின், ‘அடி அகரம் ஐயாதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி முதல் அகரம் (ப்+அ) ஐகாரமாகி (ப்+ஐ) ‘பைசு+நிணம்’ என்றானது. அடுத்து, ‘இனையவும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘சு’ கெட்டு, ‘பை+நிணம்’ என்றானது. பின் ‘குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி மிகலும்’ என்னும் விதிப்படி, தனி ஐமுன் (பை-ப்+ஐ) வருமொழி முதல் மெல்லினம் (நி-ந்+இ) மிகுந்து ‘பை+ந்+நிணம் பைந்நிணம்’ என்றானது.

5. தன்னொற்றிரட்டல்

எ.கா பசுமை+ஊன் பச்சூன்

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டுப் ‘பசு+ஊன்’ என நின்றது. பின், ‘தன்னொற்று இரட்டல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றிலுள்ள ஒற்று ‘சு ச்+உ’ இரட்டித்துப் ‘பச்சு+ஊன்’ என நின்றது. பின், ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் உயிர்(ஊ) வந்ததால், நிலைமொழி ஈற்று உகரம் ‘சு-ச+உ’ கெட்டு ‘பச்ச்+ஊன்’ என நின்றது. பின் ‘உடல்மேல் உயில்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி நிலைமொழி ஈற்று மெய்யும்(ச்), வருமொழி முதல் உயிரும் (ஊ) புணர்ந்து (ச்+ஊ-சூ) பச்சூன் என்றானது.

6. முன்னின்ற மெய் திரிதல்

எ.கா வெம்மை+சினம் வெஞ்சினம்

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டு ‘வெம்+சினம்’ என்றானது. பின், ‘முன்னின்ற மெய் திரிதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றிலுள்ள ‘ம’கரமெய்(ம்), வருமொழி ‘ச’கர மெய்யுக்கு இனமான ‘ஞ’கர மெய்யாகத்(ஞ்) திரிந்து, ‘வெஞ்+சினம் – வெஞ்சினம்’ என்றானது.

7. இனமிகல்

எ.கா பெருமை+தமிழ் பெருந்தமிழ்

‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டுப் ‘பெரு+தமிழ்’ என்றானது. பின், ‘இனமிகல்’ என்னும் விதிப்படி வருமொழி முதல் வல்லினத்திற்கு(த்) இனமான மெல்லினம் ‘ந்’ மிகுந்து ‘பெருந்தமிழ்’ என்றானது.