பொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள் பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம், குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும். பண்புப் பெயர் ‘மை’ விகுதி பெற்று வரும்.
விதி :
ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்யே நன்னூல் 136
அ. ஈறு போதல்:
எ.கா: முதுமை+மரம் = முது+மரம் = முதுமரம்
ஆ. இடையுகரம் இய்யாதல்:
எ.கா : பெருமை+ அன்
1. ஈறு போதல்,
பெருமை+ அன்= பெரு+அன்
2. இடையுகரம் இய்யாதல்,
பெ(ர்+உ)+அன் = பெ(ர்+இ)+அன் = பெரி+அன்
3. யகர உடம்படுமெய் பெறல்
பெரி(ய்+அ)ன் = பெரியன்
இ. ஆதிநீடல்:
எ.கா: செம்மை+அடி
1. ஈறு போதல்,
செம்மை+அடி = செம்+அடி
2. ஆதிநீடல்,
செம்+அடி = சேம்+அடி
3. இனையவும் என்றதனால் மகரம் கெட்டது,
சேம்+அடி = சே+அடி
4. வகர உடம்படுமெய் பெற்றது,
சே+அடி = சேவ்+அடி
5. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே,
சே(வ்+அ)டி = சேவடி
ஈ. அடியகரம் ஐயாதல்:
எ.கா: பசுமை+நிணம்
1. ஈறு போதல்,
பசுமை+நிணம் = பசு+நிணம்
2. அடியகரம் ஐயாதல்,
பசு+நிணம் = பைசு+நிணம்
3. இனையவும் என்றதனால் இடையுகரம் சகரத்தோடு கெட்டது,
பைசு+நிணம் = பை+நிணம்
4. குறில் வழி ய, தனி ஐ, நொ, து முன் மெலி மிகலுமாம்
பை+நிணம் = பைந்+நிணம் = பைந்நிணம்
உ. தன்னொற்றிரட்டல்:
எ.கா: பசுமை+ஊன்
1. ஈறு போதல்,
பசுமை+ஊன் = பசு+ஊன்
2. ஈற்றயல் உயிர் கெடல்,
ப(ச்+உ)+ஊன் = பச்+ஊன்
3. தன்னொற்று இரட்டல்,
பச்+ஊன் = பச்(ச்)+ஊன்
4. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே,
பச்(ச்+ஊ)ன் = பச்சூன்
ஊ. முன்னின்ற மெய்திரிதல்:
எ.கா: வெம்மை+சினம்
1. ஈறு போதல்,
வெம்மை+சினம் = வெம்+சினம்
2. முன்னின்ற மெய்(ம்) திரிதல்,
வெம்+சினம் = வெஞ்+சினம் = வெஞ்சினம்
எ. இனமிகல்:
எ.கா பெருமை+களிறு
1. ஈறு போதல்,
பெருமை+களிறு = பெரு+களிறு
2. வருமொழி முதல் வல்லெழுத்துக்கினமான மெல்லினம் மிகுதல்,
பெரு+களிறு = பெரு(ங்)+களிறு = பெருங்களிறு