1. பல என்னும் சொல்முன் பல என்னும் சொல்லும், சில என்னும் சொல்முன் சில என்னும் சொல்லும் வந்து புணரும். அவ்வாறு புணரும்போது,
  • இயல்பாகப் புணரும்
  • வல்லினம் மிக்குப் புணரும்
  • நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் கெட லகரம் றகரமாய்த் திரிந்து புணரும்.

இயல்பாகப் புணர்தல்

எ.கா: பல+பல – பலபல சில+சில – சிலசில

வல்லினம் மிக்குப் புணர்தல்

எ.கா: பல+பல – பலப்பல சில+சில – சிலச்சில

நிலைமொழி இறுதியிலுள்ள அகரம் கெட எஞ்சிநிற்கும் லகரம் றகரமாக திரிந்து புணர்தல்

எ.கா: பல+பல சில+சில

‘பலசில எனும் இவை தம்முன் தாம்வரின் அகரம் ஏக’ என்னும் விதிப்படி பல (ல-ல்+அ) என்பதில் உள்ள அகரம் ஏகி, பல்+பல என நின்றது. அதுபோலச் சில(ல-ல்+அ) என்பதில் உள்ள அகரம் ஏகிச் சில் என நின்றது. பின், ‘லகரம் றகரம் ஆகலும்‘ என்னும் விதிப்படி, நிலைமொழி லகரம் றகரமாய்த் திரிந்து

பற்+பல – பற்பல

சிற்+சில – சிற்சில

2. பலசில என்னும் சொற்களின் முன் பிற சொற்கள் வந்து புணரின் இயல்பாகவும், நிலைமொழியிறுதி அகரம் கெட்டும் புணரும்.

இயல்பாகப் புணர்தல்

எ.கா: பல+கலை – பலகலை

சில+வளை – சிலவளை

நிலைமொழி ஈற்று அகரம் கெட்டு புணர்தல்

எ.கா: ப(ல்+அ)+கலை = பல்கலை

சி(ல்+அ)+வளை = சில்வளை

‘பலசில எனும் இவை தம்முன் பிறவரின் அகரம் ஏகி’ என்னும் விதிப்படி, நிலைமொழி பல முன் பிற சொல்லான ‘கலை’ வந்து புணர்ந்ததால் நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் (ல – ல்+அ) ஏகிப் பல்+கலை பல்கலை என்றானது. அதேப்போல் சில (ல – ல்+அ) என்பதில் உள்ள அகரம் ஏகிச் சில்+வளை சில்வளை என்றானது.

விதி:

“பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்

இயல்பும் மிகலும் அகரம் ஏக

லகரம் றகரம் ஆகலும் பிறவரின்

அகரம் விகற்பம் ஆகலும் உளபிற”                    நன்னூல்-170