- கருத்தோடு+இசைத்து = கருத்தோடிசைத்து
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் உயிர்(இ) வந்ததால், நிலைமொழி ஈற்றிலுள்ள உகரம் (ட்+உ=டு) மெய்விட்டு ஓடியதால் கருத்தோட்+இசைத்து என ஆனது. பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள மெய்யும்(ட்), வருமொழி முதலில் உள்ள உயிரும்(இ) புணர்ந்து(ட்+இ=டி), ‘கருத்தோடிசைத்து’ என ஆனது.
2. நான்+என்று = நானென்று
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள மெய்யும்(ன்), வருமொழி முதலில் உள்ள உயிரும்(எ), புணர்ந்து(ன்+எ=னெ) ‘நானென்று’ என ஆனது.
3. தினம்+தினம் = தினந்தினம்
‘வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்’ என்னும் விதிப்படி, வருமொழீ முதலில் வல்லினம்(த்) வந்நததால், நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் ‘ந’கரமாய்த் திரிந்து, ‘தினந்+தினம்=தினந்தினம்’ எனப் புணர்ந்தது.
4. ஒன்றே+என்னின் = ஒன்றேயென்னின்
‘ஏமுன்இவ் விருமையும் உயிர்வரின்‘ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் ‘ஏ’ என்னும் உயிருக்குமுன் வருமொழி முதலில் ‘எ’ என்னும் உயிர் வந்தமையால், இவ்விரு உயிரையும் உடம்படுத்த, ‘ய’கரமெய் வந்து ‘ஒன்றே+ய்+என்னின்=ஒன்றேய்+என்னின்’ என்றானது. பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(ய்), வருமொழி முதல் உயிரும்(எ), புணர்ந்து(ய்+எ=யெ) ‘ஒன்றேயென்னின்’ என ஆனது.
‘ஏமுன்இவ் விருமையும் உயிர்வரின்‘ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் ‘ஏ’ என்னும் உயிருக்குமுன் வருமொழி முதலில் ‘எ’ என்னும் உயிர் வந்தமையால், இவ்விரு உயிரையும் உடம்படுத்த, ‘வ’கரமெய் வந்து ‘ஒன்றே+வ்+என்னின்=ஒன்றேவ்+என்னின்’ என்றானது. பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(வ்), வருமொழி முதல் உயிரும்(எ), புணர்ந்து(வ்+எ=வெ) ‘ஒன்றேவென்னின்’ என ஆனது.
5.கயல்+முள் = கயன்முள்
‘லளவேற் றுமையில் மெலிமேவின் னணவும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் ‘ம’கர மெல்லினம் வந்ததால், நிலைமொழியீற்று ‘ல’கரம் ‘ன’கரமாய்த் திரிந்து, ‘கயன்+முள் – கயன்முள்’ என்றானது.
6. கூர்மை+படை = கூர்ம்படை
‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டுக் ‘கூர்+படை’ என்றானது. பின், ‘இனமிகல்’ என்னும் விதிப்படி, வருமொழி முதல் வல்லினத்திற்கு (ப – ப்+அ) இனமான மெல்லினம்(ம்) மிகுந்து ‘கூர்+ம்+படை – கூர்ம்படை’ என்றானது.
7. கடுமை+திறல் கடுந்திறல்
‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டுக் ‘கடு+திறல்’ என்றானது. பின், ‘இனமிகல்’ என்னும் விதிப்படி, வருமொழி முதல் ‘த’கரத்திற்கு இனமான ‘ந’கர மெல்லினம் தோன்றிக் ‘கடு+ந்+திறல் – கடுந்திறல்’ என்றானது.
8. சொல்+பதம் = சொற்பதம்
‘லளவேற் றுமையில் றடவும் அல்வழி அவற்றோடு’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் வல்லினம் வந்ததால் நிலைமொழி ஈற்று ‘ல’கரம் ‘ற’கரமாகிச் ‘சொற்+பதம் – சொற்பதம்’ என்றானது.
9. மண்+அரசு = மண்ணரசு
‘தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் உயிர்(அ) வந்ததால், நிலைமொழி குறில்(ம) முன் உள்ள ஒற்று(ண்) இரட்டித்து(ண்ண்) ‘மண்ண்+அரசு’ என்றானது. பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(ண்) வருமொழி முதல் உயிரும்(அ) புணர்ந்து(ண்+அ – ண) ‘மண்ணரசு’ என்றானது.
10. இருள்+அறுத்திடும் = இருளறுத்திடும்
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(ள்) வருமொழி முதல் உயிரும்(அ) புணர்ந்து(ள்+அ – ள) ‘இருளறுத்திடும்’ என்றானது.
11. பூ+சோலை = பூஞ்சோலை
‘பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி பூ எனும் சொல்முன் வருமொழி முதல் வல்லினத்திற்கு ( சோ – ச்+ஓ) இனமான ஞகரம் தோன்றிப் ‘பூ+ஞ்+சோலை – பூஞ்சோலை’ என்றானது.
12. தன்+உயிர் = தன்னுயிர்
‘தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் உயிர்(உ) வந்ததால், நிலைமொழிக் குறில்(த) முன் உள்ள(ன்) இரட்டித்து(ன்ன்) ‘தன்ன்+உயிர்’ என்றானது. பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(ன்) வருமொழி முதல் உயிரும்(உ) புணர்ந்து (ன்+உ – னு) தன்னுயிர் என்றானது.
13. தன்+சூழ = தற்சூழ
‘ணனவல் லினம்வர டறவும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் வல்லினம்(சூ – ச்+ஊ) வந்ததால், நிலைமொழி ஈற்று ‘ன’கரம் ‘ற’கரமாகி, ‘தற்சூழ’ என்றானது.
14. கடுமை+பகை = கடும்பகை
‘ஈறு போதல்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘மை’ விகுதி கெட்டு, ‘கடு+பகை’ என்றானது. பின், ‘இனம் மிகல்’ என்னும் விதிப்படி, வருமொழி ‘ப’கரத்திற்கு இனமான ‘ம’கரம் தோன்றிக் ‘கடு+ம்+பகை-கடும்பகை’ என்றானது.
15. பரி+தியாகம் = பரித்தியாகம்
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிர்முன்(ரி – ர்+இ) வருமொழி முதலில் வந்த வல்லினம் (தி – த்+இ) மிகுந்து, ‘பரி+த்+தியாகம் – பரித்தியாகம்’ என்றானது.
16. வான்+ஆளும் = வானாளும்
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(ன்) வருமொழி முதல் உயிரும்(ஆ) புணர்ந்து (ன்+ஆ = னா) ‘வானாளும்’ என்றானது.
17. திருந்து+அவை = திருந்தவை
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என்னும் விதிப்படி, வருமொழி முதலில் உயிர்(அ) வந்ததால், நிலைமொழி ஈற்று ‘உ’கரம்(து – த்+உ) கெட்டு, ‘திருந்த்+அவை’ என்றானது. பின், ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும்(த்), வருமொழி முதல் உயிரும்(அ) புணர்ந்து(த்+அ – த) ‘திருந்தவை’ என்றானது.
18. மூன்று+குடை = முக்குடை
‘மூன்றுஆறு ஏழ்குறுகும்’ என்னும் விதிப்படி, மூன்று என்னும் எண்ணுப்பெயரின் முதலெழுத்தாகிய நெட்டெழுத்து (மூ) குற்றெழுத்தாய்க் (மு) குறுகி ‘முன்று+குடை’ என்றானது. பின், ‘ஈற்று உயிர்மெய்யும் ஏகும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிர்மெய்(று) ஏகி, ‘முன்+குடை’ என்றானது. பின், ‘மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ‘ன’கரம் வருமொழி முதல் மெய்யெழுத்தாய்த் திரிந்து (க – க்+உ) ‘முன்+குடை – முக்+குடை – முக்குடை’ என்றானது.
19. கண்+நீர் = கண்ணீர்
‘ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று ணகரத்தின் முன் வந்த நகரம்(ந்+ஈ – நீ) ணகரமாகி, (ண்+ஈ – ணீ) ‘கண்ணீர்’ என்றானது.
20. கரை+ஏற = கரையேற
‘இஈ ஐவழி யவ்வும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று உயிரையும்(ரை – ர்+ஐ) வருமொழி முதல் உயிரையும்(ஏ) உடம்படுத்த யகர உடம்படுமெய் பெற்றுக் ‘கரை+ய்+ஏற-கரைய்+ஏற’ என்றானது. பின் ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று மெய்யும் (ய்) வருமொழி முதல் உயிரும் (ஏ) புணர்ந்து (ய்+ஏ – யே) ‘கரையேற’ என்றானது.