நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது புணர்ச்சியாகும். அவ்வாறு சேரும்பொழுது இரண்டு வகைகளில் புணர்ச்சி நிகழும். அவை,

  • இயல்பு புணர்ச்சி
  • விகார புணர்ச்சி

எ.கா: ரோஐா+மாலை – ரோஐாமாலை

இங்கு ரோஐா என்பது நிலைமொழி, மாலை என்பது வருமொழி.

1. இயல்பு புணர்ச்சி

நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேரும்போது எவ்வித மாற்றமுமின்றி இயல்பாக புணர்வது இயல்பு புணர்ச்சியாகும்.

எ.கா:

மணல்+வீடு – மணல்வீடு

மண்+வெட்டி- மண்வெட்டி

ஆடு+மாடு – ஆடுமாடு

2. விகார புணர்ச்சி

நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேரும்போது சொற்கள் விகாரமடைந்து புணர்வது விகார புணர்ச்சியாகும். இது மூன்று வகைப்படும்.

தோன்றல் விகாரம்

நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேரும்போது புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் புதிய எழுத்து தோன்றி புணர்தல், தோன்றல் விகாரம் ஆகும்.

எ.கா: வாழை+பழம் = வாழைப்பழம் (தோன்றல்)

கெடுதல் விகாரம்

நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேரும்போது புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் எழுத்தானது கெட்டு புணர்தல், கெடுதல் விகாரம் ஆகும்.

எ.கா: மரம்+வேர் = மரவேர் (கெடுதல்)

திரிதல் விகாரம்

நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேரும்போது புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் எழுத்தானது திரிந்து புணர்தல், திரிதல் விகாரம் ஆகும்.

எ.கா: பொன்+குடம் = பொற்குடம் (திரிதல்)