புலி (Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய இனமாகும்.
இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.
இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும்.
உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது.
இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும்.
இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது.
புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன.
பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி அமுர் ஆற்று வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாரங்கள் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின.
நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையானது மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின.
தற்போது அவை சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் மர்றும் சுமாத்திரா ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன.
புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது.
2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும்.
மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் வாழும் புலிகள் மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று.
இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது.
தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது.
இந்தியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும்.