பெரு (Perú) அதிகாரப்பூர்வமாக பெரு குடியரசு (Republic of Peru), என்பது தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள ஒரு நாடாகும்.

இதன் வடக்கில் ஈக்வெடார், கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன. தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள்ளது.

பெருவில் உள்ளவர்களில் மிகப்பெரும்பாலானோர் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள்.

இந்நாட்டில் உலகிலேயே மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது.

தலைநகரம் – லிமா

ஆட்சி மொழி – ஸ்பானிஷ்

பரப்பளவு – 12,85,220 ச.கி.மீட்டர்

நாணயம் – நூவோ சோல் (PEN)

தொலைபேசி அழைப்புக்குறி +51

வலைதளக்குறி .pe

தொல் பழங்காலத்தில் இன்றைய பெரு நாட்டுப் பகுதியில் உலகின் சிறப்பு வாய்ந்த தொல்பழம் நாகரிகங்களில் ஒன்றான வடச் சிக்கோ நாகரீகம் செழித்து இருந்தது.

அது மட்டுமல்லாமல், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் கால் வைக்கும் முன்னர் அமெரிக்கக் கண்டங்களில் இருந்த யாவற்றினும் மிகப்பெரிய பேரரசாக விளங்கிய இன்கா பேரரசும் இங்குதான் இருந்தது.

16 ஆவது நூற்றாண்டில் (கி. பி), ஸ்பானிஷ் பேரரசு, இன்க்கா பேரரசை வென்று ஆட்சி செலுத்தத்தொடங்கியது.

1821ல், ஜூலை, 28, அன்று இன்றைய பெரு நாடு ஸ்பானிஷ் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.

கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக பெரு நாடு பலவிதமான அரசியல் மற்றும் பொருளியல் குழப்பங்களுக்கும் உள்ளாகி, ஏற்றத்தாழ்வுகள் அடைந்து இன்று முனைந்து முன்னேறி வரும் ஒரு நாடு ஆகும்.

பெரு நாடு மக்களால் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவரால் மக்களாட்சி முறையில் 25 நிலப்பகுதிகளாக வகுத்து ஆளப்படுகின்றது.

இந்நாட்டின் நில, வானிலைச் சூழல் அமைப்புகள் மிகப் பல வகையின. உலகில் உள்ள 32 வகையான வானிலைச் சூழல் வகைகளில் 28 வகையை இந்நாட்டில் காணலாம்.

நில உலகில் உள்ள தனித்து அறியத்தக்க 117 வகையான நில-உயிரின-செடி கொடியின சூழகங்களில் 84 வகையான பகுதிகள் இந்நாட்டில் உள்ளன, இந்நாட்டு நிலப்பகுதிகளில் பசிபிக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் இருக்கும் ஈரப்பதம் குறைந்த வரண்ட நிலப்பகுதிகளில் இருந்து மழைக்காடுகள் நிறந்த அமேசான் காடுகளும் பனி சூழ்ந்த உயர் ஆண்டீய மலைகளும் உள்ளன.

இந்நாட்டில் 60% பரப்பளவு காடுகள் சூழ்ந்துள்ளன. என்றாலும் அதில் 6% மக்கள்தொகையினரே வாழ்கின்றனர்.

இந்நாடு வளரும் நாடுகளில் ஒன்றாகும். தற்பொழுது 50% மக்கள் ஏழ்மையில் இருக்கின்றார்கள் எனினும் நடுத்தரமான மனித வளர்ச்சி சுட்டெண் கொண்டுள்ள நாடு ஆகும்.

இந்நாட்டின் பொருள்வளம் கூட்டும் தொழில்கள் வேளாண்மையும், மீன்பிடித்தலும், நிலத்தடி கனிவளம் எடுத்தலும், துணிமணிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்தலும் ஆகும்.

இந்நாட்டின் 28 மில்லியன் மக்கள் பல இனத்தவர்களாகவும் பன்முக பண்பாடுகள் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

ஸ்பானிஷ் மொழி பேசுவோர்கள்தாம் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இப்பகுதிகளின் “இந்தியர்கள்” என்று சொல்லப்படும் பழங்குடிகளின் மொழிகளாகிய கெச்சுவா மொழியும் (மலைப்பகுதிகளில்), அய்மாரா மொழியும் (தெற்கே), வேறுபல மொழிகளும் (அமேசான் காடுகளில்) பேசுகிறார்கள்.

பல்லின மக்க்கள் கூடி வாழ்வதால் பல தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளும், இசை, இலக்கியம், நடனம் போன்ற கலை வடிவங்களும் சிறப்பாக உள்ளன.

7 உலக அதிசயங்களுல் ஒன்றான மச்சு பிச்சு, பெரு நாட்டில் அமைந்துள்ளது.

2021, நவம்பர், 27 – அன்று, பெரு நாட்டில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட மனித உடல், தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகளும் கிடைத்துள்ளன. சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடைய, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா