மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்), Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும்.

மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது.

ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.

ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை.

இதன் தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன.

தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.

பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது.

நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.

நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் உருவாக்கப்படும் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலானது இந்திய நாட்டின் தேசியப் பறவையாகும்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்கள் சரணாலயம் உள்ளது.