வினையெச்சம்முடிவு பெறாத எச்ச வினைச்சொல் ஒரு வினை முற்றினை ஏற்றுத்தொடர் பொருள் முடிவு பெறுமாயின் அவ்வெச்சவினை வினையெச்சம் எனப்படும்.

வினையெச்சம் இருவகைப்படும். அவை, 

  1. தெரிநிலை வினையெச்சம்
  2. குறிப்பு வினையெச்சம்

தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினைச் சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

வினையை கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

எ.கா

படித்துத் தேறினான்,

படிக்கச் செல்கின்றான்,

படிப்பின் வெற்றியடைவான்.

இத்தொடர்களில் படித்து, படிக்க, படிப்பின் என்னும் சொற்கள் முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திப்பொருள் முடிவு பெறாச் சொற்களாய் நின்று, அடுத்து வரும் தேறினான், செல்கின்றான், வெற்றியடைவான் ஆகிய வினைமுற்றுகளை ஏற்றுப் பொருள் முடிவு பெறுகின்றன. எனவே இவை தெரிநிலை வினையெச்சம் ஆகும். 

வினையெச்ச வாய்ப்பாடுகள்

  1. இறந்தகால வினையெச்ச வாய்ப்பாடுகள்
  2. நிகழ்கால வினையெச்ச வாய்ப்பாடுகள்
  3. எதிர்கால வினையெச்ச வாய்ப்பாடுகள்

இறந்தகால வினையெச்ச வாய்ப்பாடுகள்

செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தன என்பன ஐந்தும் இறந்தகாலத்திற்குரிய வினையெச்ச வாய்ப்பாடுகள் ஆகும். 

எ.கா

நடந்து வந்தான் – செய்து

உண்ணுபு வந்தான் – செய்பு

பெய்யாக் கொடுக்கும் – செய்யா

காணூச் சென்றான் – செய்யூ

பசித்தென உண்டான் – செய்தென (பசித்தென – பசித்து)

நிகழ்கால வினையெச்ச வாய்ப்பாடு

செய என்பது நிகழ்காலத்திற்குரிய வினையெச்ச வாய்ப்பாடாகும்.

இவ்வெச்சம் எதிர்காலத்தையும் காட்டும்.

எ.கா

மழைப் பெய்ய பயிர் வளர்கின்றது – நிகழ்காலம்

உண்ணச் செல்வான் – எதிர்காலம்

எதிர்கால வினையெச்ச வாய்ப்பாடு

செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்பன ஆறும் எதிர்காலத்திற்குரிய வினையெச்ச வாய்ப்பாடுகள் ஆகும்.

உணின் உயிர் வாழலாம்செயின்
உண்ணிய கொண்டான்செய்யிய
காணியர் வந்தார்செய்யியர்
கொல்வான் வந்தார்வான்
அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்பான்
செல்வந் தருபாக்குச் சென்றான்பாக்கு

குறிப்பு வினையெச்சம்

காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பின் அடிப்படையில் பொருளுணர்த்தி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்ச வினை குறிப்பு வினையெச்சமாகும்.

எ.கா

மெல்ல நடந்தான்

செல்வம் இன்றி வாடினான்

இத்தொடர்களிலுள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பின் அடிப்படையில் பொருளை உணர்த்தி நின்று மற்றொரு வினை முற்றைக் கொண்டு முடிந்துள்ளமையால் குறிப்பு வினையெச்சமாகும். 


படி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் – படித்து