கி.பி. 1780 ஆம் ஆண்டு வரலாற்றில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்
இரண்டாம் ஆங்கிலேய – மைசூர் போர் நடைபெற்றது.
இராணி வேலுநாச்சியார் அவர்களுக்கு முடி சூட்டு விழா நடைபெற்றது. 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இப்படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.