ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக-சவுகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான். அவரிடம் தன் குறையைச் சொன்னார்.
“ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?” என்று ஞானி கேட்டார்.

“எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?” என்றார் செல்வந்தன்.

ஞானி அவரை கால்பந்து விளையாட்டு பார்க்க அழைத்துச் சென்றார். மைதானத்தை அடைந்து பந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். இரு அணிகளும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஞானி “எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்! ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது” என்றார்.(ஆனால், பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவது தான் தெரிந்தது)
செல்வேந்தேன் ஞானியிடம் சொன்னார் “இந்தப் பந்தைப் போன்றது தான் என் நிலையும்… வருமான வரிக்காரர்கள், தொழிலாளிகள், பிள்ளைகள் என்று நாலா பக்கமும் இடிதான்!” என்றார்.

“சரி, இதுவேண்டாம்! வேறு இடத்துக்குப் போகலாம்” என்று ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவரை அழைத்துபோனார்.அங்கு ஒரு புல்லாங்குழல் வித்துவான் ஆனந்தமாக இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்.

அவர்கள் அமைதியாக இசையை ரசித்து மகிழ்ந்தனர். மேடையின் பின்னணியில் கிருஷ்ண பகவானின் குழலூதும் விக்ரகம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஞானி மீண்டும் அவரிடம் கேட்டார் “பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை?” என்று.

“இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி, மற்றொன்று விளையாட்டுச் சாதனம்!” என்றான் தனவான்.

ஞானி விளக்கினார் “இல்லை இவை இரண்டுக்கும் தேவைப்படுவது காற்று. பந்து, தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. அதனால்தான் அது உதைபடுகிறது.

புல்லாங்குழல், உள்வாங்கிய காற்றை தகுந்த இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டு விடுகிறது. அதனால், அற்புதமான இசை உருவாகிறது. மேலும் இறைவனின் கைகளில் தவழும் பாக்கியமும் அதற்கு கிடைக்கிறது. இப்போது புரிகிறதா?” என்று கேட்டார் ஞானி.
பணத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்வதால் நிறைவு கிடைக்காது. அதைப் பாத்திரமறிந்து, தேவையறிந்து வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கும் என்று தெளிவடைந்தான் செல்வந்தன்.