ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

அது என்ன கதை..!!

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது.

அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான்.

அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது.

அவனது மகன், இளமை பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

மன அமைதிவேண்டி பல கோயில்களுக்கும் சென்றான்.

ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவைஅவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்துபோனான்.

மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.

விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள், அரற்றினாள், தவித்தாள்.

தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லி வேண்டினாள்.

உலகத்தின் தாயான ஈஸ்வரி அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதி யோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில்.

தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே அன்று அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது.

அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது நம்பிக்கையாக உள்ளது.

ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்ட போது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான்.

சீதாதேவியின் கற்புக்கனல்  சுட்டெரித்தது.

சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்து கொண்டான்.

அதனால் கடல் நீர் சூடேறியது.

அதனால் அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது.

அக்னி நீராடிய கடலில் நீராடு வோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது.

சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களை செய்வதும் விசேஷமானது.

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்..!!

ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம்.

இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது.

பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது.

சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே.

மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன.

ராமேஸ்வரம் சென்றும் குளிக்காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு.

வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்கா விட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள்.

அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது.

ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார்.

இதனால், இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்று கூற படுகிறது.

இங்கு ஆடிமாதத்தில் பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது.

தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும்.

பாவநிவர்த்தி மட்டும் அல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தல மாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள்.

சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள்.

முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும்.

ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும்.

மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும்.

ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும்.

படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும்.

இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம்.

இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.

குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன்.

போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்… எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி என்றார்.

துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார்.

திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார்.

இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர்.

நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களா, இது முறையானதா என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார்.

சகாதேவன் சொன்ன படி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது.

இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.

ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில்.

முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர்.

சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை.

இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர்.

இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை.

எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார்.

இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது.

இங்கிருந்து, 4 கி.மீ., தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம்.

கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில், சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன.

ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்று வாருங்கள்.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான்.

கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது.

ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே, ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமாவாசைக்குப் பிறகு சுப காரியங்கள் செய்யலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஏனெனில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதத்தைக் கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட மாதம் முடிந்து, அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப்படுகிறது.

அப்போது நல்ல காரியங்களைச் செய்யலாம்.

ஆடி அமாவாசை அற்புதக்காட்சி..!!

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள் புரியும் திருத்தலம் திருவையாறு.

நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம்.

நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார்.

மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார்.

இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும்.

இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு.

கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம்.

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை.

(சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.

ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை.

மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.

அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசை அன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது.

எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப் பட்டுள்ளது. பொதுவாக நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவை ஆகும்.

இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும் அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள். தரிசித்திருப்பார்கள்.

கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டார்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர்.

ஆடி அமாவாசையன்று , தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.

இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.

குரு தோஷம் ராகு கேது தோஷம் சர்ப்ப தோஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாக கருதபடுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்த அன்ன தானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம்.

அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபட வேண்டும் என் சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும்.

அவரவர் குல வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீயசக்தி இருந்தால்  விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆடி அமாவாசை..!!

பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார் கட்ன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன.

மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக் கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது.

அதில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்து குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும் போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான்.

அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பவுர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கின்றனர்.

அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் அமை என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

பித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும் போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும்.

அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார், அப்பொழுது இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின் மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும் என்று ரிஷிகள் கூறினார்கள்.

ஆனால் கவுசிக முனிவர், என்னால் பதின் மூன்று கங்கைகளில் நீராட முடியும் என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார்.

பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை.

இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற் கொண்டார்.

கவுசிக முனிவரின் உறுதியான தவத்திணைப் போற்றிய இறைவன் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார், முனிவரின் வேண்டு கோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன.

உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப் பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்ன தானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.