எண்காலி அல்லது சாக்குக்கணவாய் (Octopus) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும்.

இக்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளதால் எண்காலிகள் என்று அழைக்கப்படுகின்றன.

தலைக்காலிகள் (cephalopod) வகுப்பில், 300 வகையான எண்காலிகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.

இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

எண்காலியின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும்.

இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு.

எண்காலிக்கு மூன்று இதயங்கள் உண்டு.

இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

இதன் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்).

எண்காலியின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது.

மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது.

முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

எண்காலிகள் அதிக காலம் வாழ்வதில்லை.

பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன.

வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய எண்காலிகள் 4-5 ஆண்டுகள் வாழலாம்.

இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் எண்காலிகள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன.

பெண் எண்காலிகள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.

உலகத்திலுள்ள எல்லா எண்காலிகளும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட எண்காலி மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது.

இந்த அழகான எண்காலி உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது.

இரையை வேட்டையாடவும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் எண்காலிகள் உருமாறுகின்றன.

இதற்காக எண்காலிகள் உடலில் தனித்துவமான தோல் உயிரணுக்கள் அமைந்துள்ளன.

மேலும் இவற்றின் உடலில் உள்ள பல்வேறு நிறங்களைக் கொண்ட நிறமிகளின் மூலம் நிறம் மாறுகின்றன.

இந்த பண்பை வெளிப்படுத்துவதில் நடிக்கும் எண்காலி என்ற இனம் குறிப்பிடத்தக்கது ஆகும்.









தாவரவியல்


மனித உடல் பாகங்கள்