கத்தார் (Qatar அரபு: قطر ) மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும்.

இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது.

அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது.

கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும்.

இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது.

மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளன.

பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி இதனை அருகில் உள்ள தீவு நாடான பஹ்ரைன் இருந்து பிரிக்கிறது.

உதுமானியர் ஆட்சியைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1971 இல் விடுதலை பெறும் வரை, கத்தார் ஒரு பிரித்தானிய பாதுகாப்பு பெற்ற நாடாக விளங்கியது.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தானிகள் அவை கத்தாரை ஆண்டு வருகிறது.

ஷேக் ஜசீம் பின் முகமது அல் தானி கத்தார் அரசின் நிறுவனர் ஆவார்.

கத்தார் ஒரு மரபுவழி முடியாட்சி.

அதன் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல் தானி ஆவார்.

இது ஒரு அரசியல்சட்ட முடியாட்சியா அல்லது முழுமுதல் முடியாட்சியா என்பது தெளிவாக இல்லை.

2003-ல் நடந்த பொது வாக்கெடுப்பில், கத்தாரின் அரசியல் சட்டம் ஏறத்தாழ 98% பேராதரவுடன் ஏற்பு பெற்றது.

2017 இன் தொடக்கத்தில், கத்தாரின் மொத்த மக்கள் தொகை 2.6 மில்லியனாக இருந்தது.

இவர்களுள் 313,000 மக்கள் கத்தார் குடிமக்கள். 2.3 மில்லியன் மக்கள் அயல்நாட்டைச் சேர்ந்த குடியிருப்போர்.

இஸ்லாம் இந்நாட்டின் அலுவல்முறை சமயம் ஆகும்.

கத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது.

தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு கத்தாரை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே மனித வளங்கள் அடிப்படையில் மிகவும் முன்னேறிய நாடாகவும் காண்கிறது.

கத்தார் அரேபிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகத் திகழ்கிறது.

அரேபிய வசந்தத்தின் போது, பல்வேறு போராளிக் குழுக்களுக்கு நிதியாகவும் உலகெங்கும் வளர்ந்து வரும் அதன் ஊடகப் பிரிவான அல் ஜசீரா ஊடகக் குழுமம் வழியாகவும் ஆதரவு அளித்ததாக கருதப்படுகிறது.

கத்தார் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருப்பதால், இடைநிலை அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது.

2017, ஜூன்-ல், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது.

2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி கத்தாரில் நடைபெற்றது. இப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு ஆகும்.