கல்லணை (Grand Anicut) இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும்.
இந்த அணை கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது.
இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் – கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது.
திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது.
இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது.
அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு(கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும்.
அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும்.
எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தான்.
ஆனால், அது சாதாரண விசயம் அல்லவே. ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதனை சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள்.
காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வெறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இன்னும் ஒட்டிக்கொள்ளும்.
இப்படி பாறைகளின் மேல் பாறைகளைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணை தான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பல காலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மையைக் கண்டறிந்தார்.
காலத்தை வென்று நிறுகும் தமிழனின் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘தி கிராண்ட் அணைகட்’ என்றார் சர். ஆர்தர் காட்டன். அதுவே பின்பு உலகமெங்கும் பிரபலமானது.