செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும்.

இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.

இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.

இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.

இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது.

செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே.

சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.

1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர்.

கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன.

இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர்.

மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர்.

ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது.

இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை.

செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம்.

செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது.

இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது.

செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது.

இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது.

செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும்.

ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும்.

சூரியனை ஒரு முறை சுற்றி வர சுமார் 779.96 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

2008, மே, 25, நாசாவின் போனிக்ஸ் வின்கலம் (Robot Phoenix) செவ்வாயில் தரையிறங்கியது.