சோடியம் கார்பனேட் (Sodium carbonate) என்பது , Na2CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
சலவை சோடா, சாம்பல் சோடா, சோடா படிகங்கள் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.
இதனுடைய ஒற்றை நீரேற்று வடிவம் படிகக் கார்பனேட்டு எனப்படுகிறது.
கார்பானிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் கார்பனேட் எனப்படுகிறது.
நீரில் இது கரைகிறது.
படிகத் தன்மை கொண்ட பதின் நீரேற்றாக சோடியம் கார்பனேட் பொதுவாகத் தோன்றுகிறது.
இப்படிகம் உடனடியாக நீர்கக்கி மலர்ச்சியடைந்து வெண்மை நிறத்தூளாக மாறுகிறது.
இத்தூள் ஒரு ஒற்றை நீரேற்றாகும்.
தூய்மையான சோடியம் கார்பனேட்டு வெண்மை நிறங்கொண்டதாகும்.
நெடியில்லாத தூளாகக் காணப்படும் இச்சேர்மம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டதாகும்.
காரச்சுவை கொண்ட சேர்மமாக இருப்பதால் நீரில் கரைந்து கரைசலாகும் போது இது காரக் கரைசலாகிறது.
சோடியம் கார்பனேட் ஒரு நீர் மென்மைப்படுத்தி என்பதால் அது தினசரி உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வீடுகளிலும் அறியப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் வளரும் தாவரங்கள், ஸ்க்காட்லாந்து நாட்டில் வளரும் கெல்ப் என்னும் ஒருவகையான கடற்பாசி, ஜப்பானிய நாட்டு கடற்பாசி போன்ற சோடியம் நிறைந்த மண்ணில் வளர்ந்து வரும் தாவரங்களின் சாம்பலில் இருந்து சோடியம் கார்பனேட்டு பிரித்தெடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஏனெனில் இவ்வகை தாவரங்களை எரித்தால் கிடைக்கும் சாம்பல் மரக்கட்டையை எரித்துக் கிடைக்கும் சாம்பலில் இருந்து வேறுபட்டதாக இருந்தது.
பின்னர் இது சாம்பல் சோடா என உணரப்பட்டது.
சோடியம் குளோரைடு, சுண்ணாம்புக் கல் ஆகிய வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி சால்வே முறையில் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது.
பேரளவில் கண்ணாடி தயாரிக்க உதவுதல் சோடியம் கார்பனேட்டின் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்றாகும்.
சிலிக்காவை இளக்குகிற செயலை சோடியம் கார்பனேட்டு மேற்கொள்கிறது.
சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஏதுமில்லாமல் வினைக் கலவையின் உருகுநிலையைக் தேவையான அளவுக்குக் குறைக்கிறது.
இந்த சோடா கண்ணாடி சற்றே நீரில் கரையக்கூடியது என்பதால் உருகிய கலைவயுடன் சிறிதளவு கால்சியம் கார்பனேட் சேர்க்கப்பட்டு சோடா கண்ணாடி நீரில் கரையாத கண்ணாடியாக மாற்றப்படுகிறது.
இந்த வகையான கண்ணாடி சோடா சுண்ணாம்புக் கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது.
சோடா என்பது சோடியம் கார்பனேட்டையும் சுண்ணாம்பு என்பது கால்சியம் கார்பனேட்டையும் குறிக்கின்றன.
சோடா சுண்ணாம்பு கண்ணாடியே பல நூற்றாண்டுகளாக கண்ணாடி என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டு வந்தது.
சோடியம் கார்பனேட் பல்வேறு அமைப்புகளில் ஒப்பீட்டளவில் வலிமையான காரமாக பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, பெரும்பாலான புகைப்பட நிலைநிறுத்தும் முகவர்கள் செயல்பட அவசியமான நிலையான கார நிபந்தனைகளை பராமரிக்க pH முறைப்படுத்தியாக சோடியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீரில் கரைக்கும் போது இதுவொரு காரமாக செயல்படுகிறது.
வலிமை குறைந்த கார்பானிக் அமிலத்திலும், வலிமையான காரமான சோடியம் ஹைட்ராக்சைடிலும் இது பிரிகை அடைகிறது.
சோடியம் கார்பனேட்டு கரைசல் அலுமினியம் போன்ற உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளிவிடுகிறது.
நீச்சல் குளங்களில் உள்ள தண்ணிரில் பொதுவாகச் சேர்க்கப்படும் சேர்க்கைப் பொருள்களில் இதுவும் ஒன்றாகும்.
தண்ணிரின் pH அளவை உயர்த்துவதற்காக இது சேர்க்கப்படுகிறது.
அமிலம் கொண்டுள்ள பிற சேர்க்கைப் பொருள்கள் அல்லது குளோரின் மாத்திரைகள் சேர்ப்பதன் மூலம் pH அளவை குறைத்துக் கொள்ள முடியும்.
சமையலில் குறிப்பாக ஜெர்மானிய வகை உணவு தயாரிக்கும் சில நேரங்களில் சோடியம் ஹைட்ராக்சைடு கடுங்காரம் பயன்படுத்துவதற்குப் பதிலாக சோடியம் கார்பனேட் பயன்படுத்துகிறார்கள்.
உணவின் மேற்பகுதி பழுப்பாக நிறம் மாறுவதற்கும் அம்மேற்பகுதியின் pH அளவை மாற்றுவதற்கும் இது சேர்க்கப்படுகிறது.
கொதிக்கும் நீரில் சேர்க்கப்படும் சோடியம் கார்பனேட்டு விலங்குகளின் எலும்புகளில் இருந்து சதையை நீக்குகிறது.
தோற்பாவை கலை, கல்வி நிலையங்களுக்கு பாடம் செய்தல் போன்ற செய்ல்களுக்கு சோடியம் கார்பனேட்டு பயன்படுகிறது. வேதியியலில் சோடியம் கார்பனேட்டு ஒரு மின்பகுளியாகப் பயன்படுகிறது.
மின்னாற்பகுப்பு என்பது உப்புகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வதாகும்.
மின்னாற்பகுப்பு செயல்முறையில் சோடியம் கார்பனேட்டு மின்சாரத்தை நன்கு கடத்துகிறது.
குளோரின் அயனிகளைப் போல குளோரின் வாயுவை உருவாக்கி மின்வாயை அரிக்காமல் கார்பனேட்டு அயனிகள் செயல்படுகின்றன.
அமிலக்கார தரம்பார்த்தல் ஆய்வுகளில் இது தொடக்கநிலை தரங்காட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் சோடியம் கார்பனேட் கடின நீரை, மென்னீராக மாற்றுகிறது.