திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களோ பிற சொற்களோடு வந்து புணரும்போது,

  1. நிலைமொழியின் இறுதியிலுள்ள கு என்னும் உயிர்மெய்யெழுத்தும், ஈற்றயலெழுத்தாகிய மெய்யும் கெட்டுப் புணரும்.

எ.கா: வடக்கு+மேற்கு – வடமேற்கு

‘திசையொடு திசையும் பிறவும் சேரின் நிலையீற்றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள உயிர்மெய் ‘கு’ வும், கவ்வொற்று ‘க்’ ம் நீங்கி, வட+மேற்கு – வடமேற்கு என்றானது.

2. ஈற்றுயிர்மெய்யாகிய கு கெட்டு, ஈற்றயலெழுத்தாகிய றகரம்(ற்) னகரமாகவோ(ன்), லகரமாகவோ(ல்) திரிந்தும் புணரும்.

எ.கா: தெற்கு+கிழக்கு – தென்கிழக்கு

‘திசையொடு திசையும் பிறவும் சேரின் நிலையீற்றுயிர்மெய் நீங்கலும்‘ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள உயிர்மெய் ‘கு’ நீங்கி, தெற்+கிழக்கு என நின்றது.

பின் ‘றகரம் னலவாத் திரிதலும்‘ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று றகரம் னகரமாய் திரிந்து தென்+கிழக்கு – தென்கிழக்கு எனப் புணர்ந்து நின்றது.

திசைப்பெயரோடு பிற பெயர்களின் புணர்ச்சி:

எ.கா 1: வடக்கு+மலை – வடமலை

திசையொடு பிறவும் சேரின் நிலையீற்றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள உயிர்மெய் ‘கு’ வும், கவ்வொற்று ‘க்’ ம் நீங்கி, வட+மலை – வடமலை என்றானது.    

எ.கா 2: தெற்கு+திசை – தென்திசை

‘திசையொடு பிறவும் சேரின் நிலையீற்றுயிர்மெய் நீங்கலும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் உள்ள உயிர்மெய் ‘கு’ நீங்கி, தெற்+திசை என நின்றது.

பின் ‘றகரம் னலவாத் திரிதலும்’ என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்று றகரம் னகரமாய் திரிந்து தென்+திசை – தென்திசை எனப் புணர்ந்து நின்றது.

“திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்

றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற” – நன்னூல் 186