பருத்தி (Cotton) என்பது ஒரு மென்மையான, விரிந்து பருத்த முதன்மையான நாரிழை ஆகும்.
இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும்.
இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம்.
இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும்.
பருத்தி மால்வசியே குடும்பத்தின் கோசிப்பியம் பேரினத்தைச் சேர்ந்தது.
இதன் நாரிழை முழுக்க முழுக்க செல்லுலோசுவால் ஆனதாகும்.
இயற்கையான நிலைமைகளில், பருத்திப் பந்துகள் விரிந்து விதைகளை வெளியிடும்.
பருத்திக் காய்கள் வெடித்து பஞ்சு வெளிவந்துள்ள காட்சி
பருத்தி அமெரிக்கா, ஆப்பிரிக்கா, எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மட்டுமே விளையும் செடிவகை இழைப் பயிராகும்.
காட்டுவகைப் பருத்தியினத்தின் பேரளவு பன்முகப் பெருக்கம் முதன்மையாக மெக்சிகோவிலும் பிறகு ஆத்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அமைகிறது.
பருத்தி பழைய, புதிய உலகங்களில் தனித்தனியாக வீட்டினமாக்கப்பட்டது.
இந்தச் செடியிலிருந்து நாம் பலவகையில் பயன்படுத்தும் மென்மையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன.
பருத்திச் செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.
பருத்தி நாரிழை நூலாக நூற்கப்படுகிறது அல்லது இழையாகத் திரிக்கப்படுகிறது.
இதில் இருந்து மென்மையான காற்றூடும் துகில் (துணி) நெய்யப்படுகிறது.
வரலாற்றுக் காலத்தில் இருந்தே பருத்தியாடைகள் வழக்கில் வந்துள்ளன; கிமு ஐந்தாய்ரம் ஆண்டுகட்கு முன்பே பருத்தியாடத் துண்டுகள் சிந்துவெளி நாகரிகத்திலும் ஆடையெச்சங்கள் கிமு ஆறாயிரம் ஆண்டுகட்கு முன்பே பெரு நாட்டிலும் கிடைத்துள்ளன.
பண்டைய காலத்தில் இருந்தே பயிரிடப்பட்டாலும், நூற்புக் கதிரின் இயற்றலுக்குப் பிறகே பருத்திநூல் விலை குறைந்து பருத்தியாடை பரவலான பயன்பாட்டுக்கு வந்தது; இன்று இதுவே மிகப் பரவலாகப் பயன்படும் இயற்கை நாரிழையாக ஆடைகளில் அமைகிறது.
பருத்தி ஒரு நல்ல பணப்பயிர்.
பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது.
இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பலபடி (பாலிமர்) ஆகும்.
இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன.
ஒவ்வொரு இழையும் 20 – 30 செல்லுலோசுப் பலபடிகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன.
பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.
ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய நிலையில் ஏறத்தாழ, 25 மில்லியன் டன் அல்லது 110 மில்லியன் பருத்திச் சிப்பங்கள் 2.5% உலகின் வறட்சி நிலங்களில் விளைகின்றன.
உலகின் பேரளவு பருத்தி விலைச்சல் சீனாவில் உள்ளது. என்றாலும் இந்த பருத்தி முழுவதும் உள்நாட்டிலேயே பயன்கொள்ளப்படுகிறது.
பல்லாண்டுகளக ஐக்கிய அமெரிக்காவே பேரளவு பருத்தியைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்நாடாக உள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி சிப்பங்களில் அளக்கப்படுகிறது. ஒரு சிப்பம் 0.48 பருமீ பருமனும் 226.8 கிகி எடையும் கொண்டதாகும்.
பருத்தி, நார்ப்பயிர்களின் அரசன் என்றழைக்கப்படுகிறது.