பூவரசம்



பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம். பூவரச மரம் மருத்துவப்  பயன் கொண்ட மரமாகும்.  நூறாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.

இது இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது.  இதன் இலை, பூ, காய், விதை பட்டை என அனைத்து பாகங்களும் பயன்கொண்டவை.

Tamil                 – Poovarasam

English              – Portia tree

Sanskrit             – Gardha bhanda

Telugu               – Gangaravi

Botanical name – Thespesia populnea

பொதுவாக பூவரசம் மரம் நான்கு வகைப்படும.  இதில் வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் மரம்தான் நாட்டுப் பூவரசு.

சருமத்தை பாதுகாக்க

உடலின் பெரிய உறுப்பான சருமத்தைப் பாதுகாத்தால்தான் நோய் என்னும் அரக்கன் உள்ளே நுழைய முடியாது.  இந்த சருமத்தைப் பாதுகாக்க பூவரசம் பட்டையை பொடித்து சலித்து அதனுடன் சந்தனத் தூள் அல்லது வில்வ கட்டைத் தூள் கலந்து சருமத்தில் மீது பூசிவந்தால் சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் அகலும்.

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும்.  இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால்  கருமை மாறும்.

பூவரசங்காய்         – 2

செம்பருத்திப்பூ    – 2

பூவரச பழுத்த இலை – 2  இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பதுடன் கண் கருவளையம் மாறும்.

பூவரசம் பட்டை

நூறு வருடங்களுக்கு மேல் உள்ள பூவரசம் பட்டை இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும்.  சிவப்புக் கலராக காணப்படும்.  சித்தர்கள் இந்தப் பட்டையை காயசித்தி தரக்கூடிய மூலிகை என்கின்றனர்.  இந்த நூறு வருட மரத்தின் பட்டையை இடித்து சாறு எடுத்து மூன்று மண்டலங்கள் அருந்தி வந்தால் காயசித்தி கிடைக்கும்.  ஆண் பெண் இருபாலரும் அருந்தலாம்.  பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பை தடுக்க பூவரசம் பட்டையை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். இது கருத்தடை  சாதனத்திற்கு இணையானது.  கருப்பைக் கோளாறுகளை நீக்கும்.  ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும்.  மூலக்கிருமிகளை அழிக்கும்.

நூற்றாண்டுக்கு சென்றதொடு நூண் பூ வரசம்வேர்
தூறாண்ட குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை விதைப்பூப் பட்டையிவை கண்டாற்
புழுத்தபுண்வி ரேசனமும் போம்
                     - அகத்தியர் குணபாடம்.

குணம் – நூறாண்டுகள் சென்ற பூவரசம் வேர் நாட்பட்ட பெருநோயை நீக்கும்.  பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை  பழுத்த புண், காணாக்கடி, குத்தல், விடபாகம், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளை இவைகளைப் போக்கும் தன்மை கொண்டது.

கல்லீரல் பலப்பட

உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான்.  இந்த கல்லீரல் பாதிக்கப் பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.  கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம்.

பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது.  பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.

பூவரசன் பழுத்த இலை    – 2

பூவரசன் பழுத்த காய்        – 4

சீரகம்                                           – 2 ஸ்பூன்

சோம்பு                                        – 1 ஸ்பூன்

பூவரசம் பட்டை                    – 1 துண்டு

கீழாநெல்லி                              – 1 கைப்பிடி

சின்ன வெங்காயம்              – 4

சிறுநெருஞ்சில்                      – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 3 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 கப்பாக வந்தவுடன் அருந்தி வந்தால் கல்லீரல் பலப்படும்.  கை, கால் நடுக்கம் குறையும்.  மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்..!!

பூவரசமரம்

பூவரசம்பூ பூத்தாச்சு…. 20 வருடங்களுக்கு முன்பு வரை மார்கழி மாதக் காலைகளில் தினமும் பார்த்த காட்சி நம் நினைவில் இப்போதும் அழியாமல் இருக்கிறதுதானே! நம் பெண்கள் அதிகாலையில், எழுந்து முற்றத்தைப் பெருக்கி, குப்பையை அகற்றி, விழுந்திருக்கும் இலைதழைகளைப் பொறுக்கி, மாட்டுத்தொழுவத்துக்குப் பின் இருக்கும் உரக்குழியில் போட்டுவிட்டு, தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்துவந்து நீர் விட்டுக் கரைத்து, அதை முற்றம் முழுதும் தெளித்து, வாசல் படிக்கட்டுக்கு நேரே அரிசி மாக்கோலமிட்டு கோலத்தின் மையத்தில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் பூவரசம் பூ செருகிவைப்பார்கள். அது, ஒரு கலாசாரக் கவிதை; பண்பாட்டுப் பரிமாறல்.

அதைத் தாண்டி உற்றுப்பார்த்தால், அத்தனையும் மரபின் மருத்துவம். புறவாசல் என்ற ஒன்று இப்போது நகரத்து அடுக்குமாடி வீடுகளில் இல்லை. முன்வாசல் முற்றம் என்பது இன்று ‘காமன்’ ஏரியா. அதிகபட்சம் பிளாஸ்டிக் பூ ஒட்டலாம். அங்கே கோலத்தில் அரிசி இல்லாததால், பசியில் எறும்புகள் வேறுபக்கம் இடம்பெயர்ந்துவிட்டன. ஐரோப்பிய அழகு மலர் ‘துலிப்’ ஐ சிலாகிக்கும் பல இளசுகளுக்கு வருடம் முழுக்க மரத்தில் பூக்கும் நம் ஊர் துலிப் பற்றி தெரியாது. இந்திய துலிப் மலர்தான் அன்று பாட்டி வாசலில், சாணத்தில் செருகிய பூவரசு. ‘பூக்களின் அரசன் அதனால்தான் பூவரசு’ எனும் காரணப் பெயர்’ என்றும் இல்லை இல்லை பூமிக்கு அரசன் அதனால்தான் அந்தப் பெயர்’ என்றும் இந்த மலரைக் கொண்டாடியது பண்டைத் தமிழகமும் சித்த மருத்துவமும்.

மருத்துவ உலகுக்கு இந்த மரத்தின் இலை, பூ, பட்டை என அத்தனையும் தெரியும். வணிக உலகுக்கு அதன் மரக்கட்டை, அதன் வீட்டுப்பொருளாக்கப் பயன் தெரியும். இசை உலகுக்கு, தவில், தம்புரா செய்யும் பயன் தெரியும். இப்படி நம் வாழ்வின் அத்தனை அங்கங்களிலும் பரிச்சயமான நாட்டு மருந்து பூவரசு. தன்னுடைய துவர்ப்பும் கசப்புமான சுவைகளில் ஆல்கலாய்டுகளையும் ஃபிளேவனாய்டுகளையும் ஒளித்துவைத்துள்ளது பூவரசு. குறிப்பாக ‘தெப்சின்’ எனும் அதன் மஞ்சள் நிறமிச் சத்து ஒரு மாமருந்து’ என்கிறது அதை ஆய்ந்தறியும் நவீன மருந்தறிவியல். புண்களை ஆற்றும் தன்மை இந்த பூவரசின் மிக முக்கிய மருத்துவக் குணம். புண்களைக் கழுவ இதன் பட்டையைக் கஷாயமாக்கிப் பயன்படுத்துகிறது சித்த மருத்துவம். இந்தக் கஷாயத்தைப் பயன்படுத்துகையில், பட்டையின் எதிர் நுண்ணுயிரி ஆற்றல், புண்களில் கிருமி வளராமல் இருக்க ஒரு பக்கம் காக்கிறது. பட்டையில் உள்ள துவர்ப்புச் சத்து (Tannins) புண்களை ஆற்றிக் குணமாக்கும் புதுத் திசுக்களை (Granulation tissue) வளர்க்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல… இரண்டு மருத்துவம்! லேசில் ஆறாத புண்களான, ரத்த நாள தாபிதப் புண்கள் (Venous ulcers), சர்க்கரை நோயில் வரும் புண்கள் முதலான அத்தனை ஆறாத புண்களுக்கும் பூவரசம் பட்டையின் கஷாயக் கழுவல் பயனாகும். இதன் பட்டையை நுண்ணிய துகளாக்கி, இலைத்தூளை சம அளவு கலந்து பயன்படுத்தும் வழக்கமும் சித்த மருத்துவத்தில் உண்டு. இது முதலிலேயே நம் கவிஞர்களுக்குத் தெரிந்திருந்தால், ‘பூவரசம்பூ பூத்தாச்சு… பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ என்பதற்குப் பதிலாக, ‘புண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ என எழுதியிருப்பார்கள். கழுத்தில் அணியும் செயின், கைக்கடிகாரம் இவை அழுத்தி ஏற்படும் கரும்படலத் தோல் நோய் மறைய ‘பூவரசம் பூத்தைலம்’ பயனாகிறது. இதை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். பூவின் இதழ்களைச் சேகரித்து, அதை நல்லெண்ணெயில் காய்ச்சி, கருத்த தேமலில் தடவிவர, கரும்படலம் மெள்ள மெள்ள மறையும்..!!

வெண்திட்டு (Vitiligo/Leucoderma)

ஒரு கவலை கொள்ளும் நோய் அல்ல. தோலின் நிறமிச்சத்து இன்மை மட்டுமே’ எனப் பலமுறை சொன்னாலும், அது இன்றும் பாதிப்புற்றோருக்குத் தரும் மனஅழுத்தமும், சமூக அழுத்தமும் சொல்லி மாளாதது. அந்த வெண்படைக்கு எளிய தீர்வைத் தருவது இந்த பூவரசம்பட்டை’ என்கின்றன சித்த மருத்துவ ஆய்வுகள். பூவரசம் பட்டையைச் சேகரித்து, அதனைப் பொதித்துவைத்துக் கொண்டு, 20 கிராம் எடுத்து 240 மில்லி நீர்விட்டு அந்தத் தண்ணீர் 60 மில்லியாக வரும் வரை கொதிக்கவைத்து கஷாயமாக்கி, அதைக் காலை உணவுக்கு முன் குடிப்பதும், உதட்டில் வரும் வெண்புள்ளி நனையும்படி கொப்பளிப்பதும் இந்த வெண்திட்டுக்களை மறையவைக்கிறது. காஸிபோல் (Gossypol) எனும் முக்கிய சத்துதான் இந்த மரப்பட்டையிலும் பூவிலும் பொதிந்திருந்து பல மருத்துவக்குணங்களைத் தருகிறது’ என்கிறது நவீன அறிவியல். மேலும், கருத்தரிப்பு தாமதமாவதைத் தடுக்கவும், அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய்க்கும் இந்த மரத்தின் சத்துக்கள் பயனாவதை உறுதி செய்துள்ளன. நினைவிருக்கிறதா நாம் சிறு வயதில் கொண்டாடி மகிழ்ந்தது. பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதி மகிழ்ந்தோம்..!!