பெல்ஜியம், மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும்.

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும்.

இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது.

பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.

ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது.

எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.

டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது.

ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர்.

பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர்.

எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.


Map of Belgium