பொருள்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழில்பெயர் என்னும் அறுவகைப் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆகுபெயர்களைப் பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள் என்பர்

1. பொருளாகுபெயர்

முதற்பொருளின் பெயர் அதன் சினைப்(உறுப்பு) பொருளுக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும். இது முதலாகு பெயர் எனவும் வழங்கப்படும்.

எ.கா: முல்லையைத் தொடுத்தாள்

இதில் முல்லை என்பது முல்லைக் கொடியின் பெயர். இங்கு தொடுத்தாள் என்னும் செயல் குறிப்பால் அதன் சினைப் பொருளாகிய முல்லைப் பூவை குறிக்கின்றது. இவ்வாறு முல்லை எனும் முதற்பெயர் அதன் சினைப்பெயராகிய பூவுக்கு ஆகிவந்துள்ளதால் பொருளாகு பெயர் ஆகும்.

2. இடவாகு பெயர்

ஓர் இடத்தின் பெயர் இடத்தை உணர்த்தாமல், அந்த இடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.

எ.கா: ஊர் பாராட்டியது

இதில் ஊர் என்னும் இடப்பெயர் ஊரைக் குறிக்காமல், ஊரில் உள்ள மக்களைக் குறிக்கிறது. ஆதலால் இது இடவாகு பெயர் ஆகும்.  

3. காலவாகு பெயர்

ஒரு காலத்தின் பெயர் காலத்தை உணர்த்தாமல், அந்த காலத்தோடு தொடர்புடைய  பொருளுக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.

எ.கா: கார்த்திகை பூத்தது

கார்த்திகை என்பது காலத்தை உணர்த்தாமல் அக்காலத்தில் பூக்கும் செங்காந்தளுக்கு ஆகி வந்துள்ளது.

4. சினையாகு பெயர்

ஒரு சினைப்பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் ஆகும்.

எ.கா: தலைக்கு ஒரு வாழைப்பழம் கொடு

இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், வாழைப்பழம் கொடு என்னும் குறிப்பால் தலையை உணர்த்தாமல், அந்த தலையை உடைய மனிதனைக் குறிக்கின்றது.

5. பண்பாகு பெயர்

ஒரு பண்பின் பெயர் அப்பண்புடன் தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது பண்பாகு பெயர். இதனை குணவாகு பெயர் என்பர்.

எ.கா: மஞ்சள் பூசினாள்

மஞ்சள் என்னும் நிறத்தின் பெயர் நிறத்தை உணர்த்தாமல், மஞ்சள் கிழங்கிற்கு ஆகி வந்துள்ளது.  

6. தொழிலாகு பெயர்

ஒரு தொழிலின் பெயர் அந்த தொழிலுக்கு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

எ.கா: வற்றல் தின்றான்

வற்றல் என்னும் தொழில் பெயர் அதனோடு தொடர்புடைய உணவுப்பொருளுக்கு ஆகி வந்துள்ளது.