போலந்து என்றழைக்கப்படும் போலந்து குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இதன் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசு, சிலோவேக்கியா ஆகியனவும் கிழக்கில் உக்ரைன், பெலாரஸ் ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வடக்கில் பால்டிக் கடலும், ரஷ்யா கலினின்கிராட் ஒப்லாசுத்தும் உள்ளன.

போலந்தின் மொத்தப் பரப்பளவு 312,679 சதுர கிலோமீட்டர் (120,726 சதுர மைல்).

இதன் அடிப்படையில் போலந்து உலகின் 69 ஆவது பெரிய நாடாகவும், ஐரோப்பாவில் 9 ஆவது பெரியதாகவும் இருக்கிறது.

38 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போலந்து உலகின் 34 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது பெரிய நாடாகவும் உள்ளது.

போலந்து, “வோய்வோட்சிப்” எனப்படும் 16 மாகாணங்களைக் கொண்ட ஒற்றையாட்சி நாடு.

இது, ஐரோப்பிய ஒன்றியம், நோட்டோ, ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி, பன்னாட்டு ஆற்றல் முகமை, ஐரோப்பிய அவை, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, பன்னாட்டு அணு ஆற்றல் முகமை, ஜி6, பால்டிக் கடல் நாடுகள் அமைப்பு, விசேகிராட் குழு, வெய்மார் முக்கோணம், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் உறுப்பு நாடாகவும் உள்ளது.

போலந்தின் உருவாக்கம், இன்றைய போலந்து நாட்டுக்குள் அடங்கும் பகுதிகளை ஆண்ட முதலாம் மியெசுக்கோ (Mieszko I) 966 ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தழுவியதுடன் தொடர்பானதாகக் கடுதப்படுகின்றது.

1025 ஆம் ஆண்டில் போலந்து இராச்சியம் உருவானது.

1569ல் லுப்லின் ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம் உருவாக்கப்பட்டதன் மூலம், போலந்து, லித்துவேனியப் பெரிய டச்சியுடன் நீண்டகாலக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது.

1795 ஆம் ஆண்டில், போலந்தை, பிரசிய இராச்சியம், ரஷ்யா பேரரசு, ஆஸ்திரியா ஆகியவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால், இந்த உறவு முடிவுக்கு வந்தது.

1918 ஆம் ஆண்டில், போலந்து, இரண்டாவது முறையாக போலந்துக் குடியரசு ஆக விடுதலை பெற்றுக்கொண்டது.

1939 செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன. ஏறத்தாழ ஆறு மில்லியன் போலந்து மக்கள் இப்போரில் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலந்து, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வட்டத்துள் அடங்கியதான போலந்து மக்கள் குடியரசாக உருவாகி 1989 வரை நிலைத்திருந்தது.

1989 ஆம் ஆண்டுப் புரட்சியின் போது 45 ஆண்டுக்கால பொதுவுடைமை ஆட்சி தூக்கி எறியப்பட்டு ஜனநாயக ஆட்சி போலந்தில் நிறுவப்பட்டது.

1867 ஆம் ஆண்டு, நவம்பர், 17 அன்று, வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி அவர்கள் போலந்தில் பிறந்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது பெரும் அழிவுகளுக்கு உட்பட்டிருந்தும், போலந்தின் பெரும்பாலான பண்பாட்டுச் செல்வங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தற்போது மொத்தமாக 14 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் போலந்தில் உள்ளன.

பொதுவுடைமை ஆட்சி நீக்கப்பட்ட பின்னர், மனித வளர்ச்சி தொடர்பில் போலந்து அதியுயர் தரத்தை எட்டியுள்ளது.