முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.
இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது.
இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.
1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் ஆவார்.
இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி ஆகும்.
இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும்.
மதராசு மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு ‘பெரியாறு திட்டத்தின்’ கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
1886 ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.