மெய்யீற்றின்முன் உயிர்:

நிலைமொழி ஈற்றுமெய்யுடன் வருமொழி முதலிலுள்ள உயிர் இணைந்து விடும்.

எ.கா: தமிழ்+அன்னை – தமி(ழ்+அ)ன்னை = தமிழன்னை

விதி: “உடல்மேல்உயிர்வந் தொன்றுவ தியல்பே”            – நன்னூல் 204


நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன்னே நின்ற ஒற்று உயிர் முதன்மொழியுடன் புணருணுங்காலை இரட்டும்.

எ.கா: முள்+ இலை = முள்ளிலை

  • தனிக்குறில் முன் ஒற்று       – முள்
  • ஒற்று இரட்டியது             – முள்(ள்)+இலை
  • உடல்மேல் உயிர் ஒன்றியது   – முள்(ள்+இ)லை

                                    = முள்ளிலை

விதி: “தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்”         நன்னூல் 205


மகரஈறு

அ. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது  ஈற்று மகரம் கெட்டு உயிரீறாய் நின்று, உயிர் முதன் மொழியோடு உடம்படுமெய் பெற்றும், வல்லின முதன் மொழியோடு வல்லெழுத்து மிக்கும் புணரும்.

எ.கா:

  • மரம்+இலை = மர+இலை

மர+வ்+இலை = மரவிலை

  • மரம்+கிளை = மர+கிளை

மர+க்+கிளை = மரக்கிளை

  • சில இடங்களில் வல்லின முதன்மொழியோடு புணரும்போது நிலைமொழியிறுதி மகரம் வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.

எ.கா:

தினம்+தினம் = தின+தினம்

தின+ந்+தினம் = தினந்தினம்

  • மகரஈறு மெல்லின, இடையின முதன்மொழியோடு புணரும்போது மகரம் கெட்டு, இயல்பாகப் புணரும்.

எ.கா:

  • இனம்+மணி = இன+மணி
  • மரம்+வேர் = மரவேர்