இலித்தியம் (Lithium) என்பது Li என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன், வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு உலோகம்.

இது தனிம அட்டவணையில் 3 ஆவதாக உள்ள ஒரு தனிமம்.

இதன் அணுவெண் 3.

இதன் அணுக்கருவில் மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன.

இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம்.

உலோகங்கள் யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட லித்தியம் ஆகும்.

லித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதியளவு தான்.

லித்தியம் மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது.

லித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் அணுக்கருவிலே மூன்று நேர்மின்னிகள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று எதிர்மின்னிகள் (electron, இலத்திரன்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன.

இந்த மூன்று எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உட்சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன.

ஆனால், ஓர் எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால், இவ்வெதிர்மின்னியை வேதியியல் வினைகளில் எளிதில் இழக்கின்றது.

இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), லித்தியம் தனியாய் எளிதில் கிடைப்பதில்லை.

தூய லித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம்.

இதன் தன்வெப்பக் கொள்ளளவு எல்லாத் திண்ம நிலைப் பொருள்களிலும் மிகப்பெரியது.

இதன் பெறுமானம் 3582 J Kg−1 K−1 ஆகும்.

அதாவது ஒரு கிலோகிராம் எடையுள்ள இலித்தியத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வினால் உயர்த்த வேண்டுமெனில், 3582 ஜுல் (Joule) ஆற்றல் தரவேண்டும்.

இலித்தியம் புவியில் கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவான பொருள்.

இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது.

புவியின் புற ஓட்டில் மில்லியனில் 20 முதல் 70 பங்குகள் (ppm) என்ற அளவில் உள்ளது.

லித்தியம் தண்ணீரில் மிதக்கும்.