சிவத்தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுள் அதிபத்த நாயனாரும் ஒருவர் ஆவார்.
இவர் சோழ நாட்டில், நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் இனத்தில் பிறந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
மேலும் மீன்பிடித் தொழிலுக்கு தலைவராகவும் இருந்து வந்தார். இவர் சிவபெருமான் மீது தீராத காதலைக் கொண்டிருந்தார். எனவே, ஒவ்வொரு நாளும் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை ‘சிவபெருமானுக்கு அர்ப்பணம்’ எனக் கூறி கடலிலேயே விட்டுவிடுவது வழக்கம்.
இதனை தொடர்ந்து செய்து வந்தார். மீன்கள் எவ்வளவு குறைவாக கிடைத்தபோதிலும் இவர் தனது வழக்கத்தை மாற்றவில்லை. சில நாட்கள் ஒருசில மீன்கள் மட்டுமே கிடைத்தன.
மேலும் சில நாட்கள் ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைத்தது, என்றாலும் அந்த ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து இவ்வாறு ஒரு மீன் மட்டும் வலையில் அகப்பட, அதையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து வந்தார் அதிபத்தர்.
இதனால் இவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. இருப்பினும் அதிபத்தர் தனது வழக்கத்தை மாற்றவில்லை. சிவபெருமான் மீது மாறாத பக்தியைக் கொண்டிருந்தார்.
ஒருநாள் வழக்கம்போல் அதிபத்தர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.
அப்போது, அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், அவரது வலையில் ரத்தினங்களும் மாணிக்கமும் நிறைந்த பொன்னாலான மீன் ஒன்றை அவரது வலையில் பிடிபடுமாறு செய்தார்.
அந்த பொன்மீனை வலையில் பார்த்த மற்ற மீனவர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் அதிபத்தரிடம் காட்டினர். அன்று அந்த ஒரு மீனைத் தவிர வேறு எந்த மீனும் பிடிபடவில்லை.
எனவே, அதிபத்தர் சற்றும் சலனமின்றி அந்த பொன்மீனை எடுத்து ‘சிவபெருமானுக்கு அர்ப்பணம்’ எனக் கூறி கடலில் விட்டுவிட்டார்.
அவரது எல்லையற்ற அன்பில் மகிழ்ந்த சிவபெருமான் உமாதேவியுடன் அவருக்கு காட்சியளித்து முக்தியளித்தார். அன்று முதல் அவர் நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
தங்கமீன் அர்ப்பணிக்கும் விழா
ஆண்டுதோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்கமீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது.
விழாவின்போது கோவிலில் இருந்து வெள்ளி காளை வாகனத்தில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகை புதிய கடற்கரையை அடைவார்.
அங்கு அதிபத்த நாயனார் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும்போது தங்க மீன் கிடைக்கும் காட்சியும், அதை சிவபெருமானுக்கு வழங்கும் காட்சியும் நடைபெறும். பின்னர் சிவபெருமான் அதிபத்தருக்கு காட்சியருளி முக்தியளிக்கும் காட்சியும் நடைபெறும்.